ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் கடத்திய காரை துரத்தி பிடித்த போலீசார் வடமாநில வாலிபர் கைது


ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் கடத்திய காரை துரத்தி பிடித்த போலீசார் வடமாநில வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 Sept 2020 6:57 AM IST (Updated: 22 Sept 2020 6:57 AM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை அருகே ரூ.3 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்திய காரை சினிமா பாணியில் போலீசார் துரத்தி சென்று பிடித்தனர். காரை ஓட்டி வந்த வடமாநில வாலிபரை கைது செய்தனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் தலைமையில் போலீசார் கிருஷ்ணகுமார், சதீஷ்குமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பெரம்பலூர் நோக்கி வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் காரை ஓட்டி வந்தவர், போலீசாரை கண்டதும் காரை நிறுத்தாமல் அதிவேகமாக பெரம்பலூர் நோக்கி காரை ஓட்டிச்சென்றார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், தங்களது ரோந்து வாகனத்தில் அந்த காரை துரத்தி சென்றனர். ஆனால் காரை ஓட்டி வந்தவர் போலீசாரிடம் சிக்காமல் இருக்க, காரை மேலும் வேகமாக ஓட்டினார். எசனை அருகே சென்றபோது அந்த கார் நிலை தடுமாறி அருகே உள்ள பள்ளத்தில் இறங்கியது.

மூட்டை, மூட்டையாக...

இதையடுத்து காரை சுற்றி வளைத்த போலீசார், காரில் இருந்த நபரை பிடித்தனர். மேலும் காரை சோதனையிட்டனர். அப்போது அந்த காரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டைகளாக இருந்தன. போலீசார் இதுபற்றி போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார், புகையிலை பொருட்களை காரில் கடத்திய நபரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலம் ராஜ்புட் பகுதியை சேர்ந்த சவாய்சிங் (வயது 29) என்பதும், அவர் தற்போது சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் வீரபாண்டி நகரில் தங்கி இருப்பதும், பெரம்பலூரை சேர்ந்த சங்கர் என்பவருக்கு புகையிலை பொருளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

கைது

இதையடுத்து கார் மற்றும் அதில் கடத்தி வரப்பட்ட 19 மூட்டைகளில் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சவாய்சிங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

நள்ளிரவு நேரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திச்சென்ற காரை, சினிமா பாணியில் போலீசார் துரத்தி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story