குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ‘கேடயம்’ திட்டம் மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. தொடங்கி வைத்தார்


குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ‘கேடயம்’ திட்டம் மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 Sep 2020 2:10 AM GMT (Updated: 22 Sep 2020 2:10 AM GMT)

திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ‘கேடயம்’ என்ற திட்டத்தை மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.ஜெயராம் தொடங்கி வைத்தார்.

திருச்சி,

திருச்சி சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்காகவும், இதுதொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி.ஆனி விஜயா ‘கேடயம்‘ என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி உள்ளார்.

சர்வதேச நீதி குழுமம் என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் தொடக்க விழா திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ள ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.ஜெயராம் தலைமை தாங்கி இந்த செயல் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் இந்த திட்டத்திற்கான லோகோ மற்றும் சமூக வலைத்தள முகவரிகளையும் அறிமுகம் செய்து வைத்தார்.

முற்றுப்புள்ளி

விழாவில் ஐ.ஜி.ஜெயராம் பேசும்போது கூறியதாவது:-

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் வருகிறது. பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடந்தால் அதனை புகார் செய்ய வருவது இல்லை. அதற்கு காரணம் சமுதாயத்தில் ஆண் ஆதிக்கம் அதிகமாக இருப்பதுதான். இது ஆரம்பத்தில் இருந்தே தொடர்கிறது. நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் தான் குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடக்கிறது. எனவே, அப்படிப்பட்ட இடங்களை கண்டுபிடித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதையும் மீறி குற்றங்கள் நடக்கும்போது குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு நடத்தி அவர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான் இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

டி.ஐ.ஜி.ஆனி விஜயா

திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி.ஆனி விஜயா பேசியதாவது:-

நான் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பதவியேற்ற போது புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டாள். திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்த குற்ற சம்பவங்கள் பற்றிய புள்ளி விவரங்களை சேகரித்து அதில் 25 முதல் 30 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக சம்பவங்கள் அதிகளவில் நடந்து உள்ளது. எனவே அந்த இடங்களில் விஞ்ஞான ரீதியாக விழிப்புணர்வு முகாம் நடத்தி மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்கு காவல் துறை மட்டுமின்றி அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து ஆதரவு கொடுக்க வேண்டும்.

இவர் அவர் பேசினார்.

பெண் நீதிபதி

திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி நந்தினி பேசுகையில், தமிழகத்தில் தான் பெண்களின் வழக்குகளை விசாரிக்க முழுக்க முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு பூர்வீக சொத்தில் உரிமை உண்டு என்ற சட்டமும் தமிழகத்தில் தான் முதன் முதலாக அமல்படுத்தப்பட்டது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பல சட்டங்கள் இருக்கின்றன. ஆனாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. பெண்களுக்கான சட்டங்கள் என்னென்ன இருக்கிறது என்பது பற்றி முதலில் ஆண்களிடம் தான் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆண்கள் அதனை உணர்ந்தால் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும். சட்டம் தெரிந்த பெண்கள் அதனை சரியான முறையில் கையாள தயங்கக்கூடாது என்றார்.

மாவட்ட எஸ்.பி.க்கள்

விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயச்சந்திரன் (திருச்சி), சீனிவாசன் (அரியலூர்), பகலவன் (கரூர்), பாலாஜி சரவணன் (புதுக்கோட்டை), நிஷா பார்த்திபன் (பெரம்பலூர்) மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் 5 மாவட்ட அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறை மற்றும் குற்றங்கள் பற்றி 9384501999, 6383071800 என்ற வாட்ஸ்-அப் எண்களில் புகார் செய்யலாம்.

Next Story