கிராமப்புற பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்


கிராமப்புற பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 22 Sep 2020 2:41 AM GMT (Updated: 22 Sep 2020 2:41 AM GMT)

பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

தர்மபுரி,

பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் கோவிந்தசாமி, செயலாளர் சாவித்ரி பழனி, பொருளாளர் அமிர்தவல்லி பிரபாகரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

14 மற்றும் 15-வது நிதிக்குழு மானியத்திற்கான பணிகளுக்கு கிராம ஊராட்சி மன்றத்தின் மூலம் ஒப்பந்தப்புள்ளிகள் கோருதல் மற்றும் நிர்வாக அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சேமிப்பு நிதி மற்றும் கூடுதல் நிதிக்கு சாலை பணிகளை தேர்ந்தெடுப்பதை தவிர்த்து கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை தேர்வு செய்து அந்த பணிகளுக்கு ஊராட்சி மன்றம் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோர நிர்வாக அனுமதி அளிக்க வேண்டும்.

டிரைவர்கள்

கொரோனா பேரிடர் மேலாண்மை காலத்தில் ஊராட்சி மன்றங்கள் மூலமாக கொரோனா நோய் தொற்றை தடுக்க மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும். 2020-2021-ம் ஆண்டிற்கான திட்டங்களுக்கு உரிய பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட பேட்டரி வாகனங்களுக்கு உரிய டிரைவர்களை நியமிக்க வேண்டும். கிராமப்புற பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஊராட்சி செயலாளர்களை அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் ஒப்புதல் இன்றி பணி மாறுதல் செய்யக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Next Story