கிருஷ்ணகிரி அருகே பயங்கரம்: தீப்பெட்டி தர மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட சிறுவன்


கிருஷ்ணகிரி அருகே பயங்கரம்: தீப்பெட்டி தர மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட சிறுவன்
x
தினத்தந்தி 22 Sept 2020 8:19 AM IST (Updated: 22 Sept 2020 8:19 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே தீப்பெட்டி தர மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட சிறுவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பன்னந்ததோப்பு பக்கமுள்ள மங்கம்மாபுரத்தைச் சேர்ந்தவர் மேச்சேரி. இவரது மனைவி பச்சியம்மாள் (வயது 22). கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவன் 17 வயது சிறுவன். இவர்கள் 2 பேரும் உறவினர்கள் ஆவார்கள். நேற்று முன்தினம் இரவு அந்த சிறுவன் மதுபோதையில், பச்சியம்மாள் வீட்டிற்கு சென்றான். அங்கு அவரிடம் பீடி பற்ற வைக்க தீப்பெட்டி கேட்டுள்ளான். அதற்கு பச்சியம்மாள் தீப்பெட்டி இல்லை என்று கூறினார். அதன்பின்னர் அந்த சிறுவன் அங்கிருந்து சென்று விட்டான். இந்த நிலையில் பச்சியம்மாள் வீட்டின் முன்பு சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த சிறுவன் உரிமம் பெறாத நாட்டுத்துப்பாக்கியை எடுத்து வந்து பச்சியம்மாளை சுட்டான். இதில் அவருக்கு இடது கை, வலது முழங்கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். துப்பாக்கியால் சுட்டதில் காயம் அடைந்த பச்சியம்மாளை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொலை முயற்சி வழக்குப்பதிவு

இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது தீப்பெட்டி கொடுக்காததால் பச்சியம்மாளை சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக பச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கீர்த்தி மற்றும் போலீசார் அந்த சிறுவன் மீது கொலை முயற்சி, இந்திய ஆயுத சட்டம் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story