கந்துவட்டி கொடுமையால் மனைவி, மகனுடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


கந்துவட்டி கொடுமையால் மனைவி, மகனுடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Sep 2020 2:59 AM GMT (Updated: 22 Sep 2020 2:59 AM GMT)

கந்துவட்டி கொடுமையால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனைவி, மகனுடன் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம்,

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே திப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 40). விவசாயி. இவருக்கு மைதிலி (34) என்ற மனைவியும், 11 வயதில் மகன் ஒருவனும் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தரம் தனது விவசாய வேலை தொடர்பாக திப்பம்பட்டியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் கோவிந்தன் என்பவரிடம் ரூ.16 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இதற்கு அவ்வப்போது அசலும், வட்டியும் சேர்த்து கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுவரை சுந்தரம் மொத்தம் ரூ.18 லட்சம் திருப்பி கொடுத்து உள்ளார். ஆனால் கோவிந்தன் வட்டி, அசலுடன் சேர்த்து ரூ.21 லட்சம் தர வேண்டும் என தெரிவித்து சுந்தரத்தை மிரட்டி வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி சுந்தரம் நேற்று காலை மனைவி மைதிலி, 11 வயது மகனுடன் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது அவர், தனது பையில் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தன் மீதும், அவரது மனைவி, மகன் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

விசாரணை

இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக மண்எண்ணெய் பாட்டிலை பறித்து சுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தினரை தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதை தடுத்தனர். இதனைத்தொடர்ந்து தனக்கு நடந்த கந்துவட்டி கொடுமை தொடர்பாகவும், கூடுதல் வட்டி கேட்டு மிரட்டும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் போலீசாரிடம் சுந்தரம் தெரிவித்தார். பின்னர் 3 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். கந்துவட்டி கொடுமை தாங்காமல் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே விவசாயி தனது குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story