தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு உடலில் கரியை பூசி நூதன ஆர்ப்பாட்டம்


தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு உடலில் கரியை பூசி நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Sept 2020 8:43 AM IST (Updated: 22 Sept 2020 8:43 AM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து ஓ.பி.சி., டி.என்.டி. சமூகங்கள் நல அமைப்பினர் உடலில் கரியை பூசி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, அனைத்து ஓ.பி.சி. மற்றும் டி.என்.டி. சமூகங்கள் நல அமைப்பு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் சிலர் நேற்று வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் இருந்து அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களில் 2 பேர், அரை நிர்வாண கோலத்தில் உடல் முழுவதும் கரியை பூசிக்கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெறும் பெட்டியில் அவர்கள் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரையும் (ஓ.பி.சி.) சேர்க்க வேண்டும், 2011-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து மனுக்கள் அளித்தும், நூதன முறையில் போராட்டங்களும் நடத்தி வருகிறோம்“ என்றனர்.

நடவடிக்கை

இதைத்தொடர்ந்து, ஆதித்தமிழர் கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நிறுவனர் ஜக்கையன் தலைமை தாங்கினார். ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவரை சாதி ரீதியாக அவமதித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது இந்த சம்பவம் தொடர்பாக தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story