அதிகாலையில் கொடூர சம்பவம் பால்காரர் வெட்டிக்கொலை சிவகாசியில் பரபரப்பு


அதிகாலையில் கொடூர சம்பவம் பால்காரர் வெட்டிக்கொலை சிவகாசியில் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Sep 2020 3:54 AM GMT (Updated: 22 Sep 2020 3:54 AM GMT)

சிவகாசியில் நேற்று அதிகாலை பால்காரர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது.

சிவகாசி,

சிவகாசி சரஸ்வதிபாளையத்தை சேர்ந்தவர் முனியசாமி (வயது 53). பால்காரர். இவருடைய தம்பி சோலையப்பன். இவர் பன்றிகளை வளர்த்து விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் சோலையப்பனின் பன்றிகள் அடிக்கடி காணாமல் போனது.

இதுகுறித்து அவர் விசாரித்து வந்தார். அப்போது மாரனேரி அருகில் வசித்து வரும் சிலர் சோலையப்பனின் பன்றிகளை திருடி சென்றது தெரியவந்தது. இதைதொடர்ந்து பால்காரர் முனியசாமி மற்றும் அவரது தம்பி சோலையப்பன் ஆகியோர் மாரனேரியை சேர்ந்த சிலரிடம் பன்றியை திருப்பி தரவில்லை என்றால் போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியதாக தெரிகிறது.

வெட்டிக்கொலை

இந்தநிலையில் நேற்று அதிகாலை 4.15 மணிக்கு முனியசாமி தன்னுடைய வீட்டில் இருந்து பால் வாங்குவதற்கான வாகனத்தில் வெளியே வந்தார். வீட்டில் இருந்து மெயின்ரோட்டுக்கு வருவதற்குள் மறைந்து இருந்த சிலர் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் பால்காரர் முனியசாமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வந்து முனியசாமியை காப்பாற்ற முயன்றுள்ளனர்.

ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிவகாசி நகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பன்றி திருட்டு தொடர்பாக முனியசாமி, சோலையப்பன் ஆகியோரிடம் தகராறு செய்தவர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என் போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

விசாரணை

பின்னர் சிலரது வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் யாரும் வீட்டில் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் அவர்களது செல்போன்கள் சுவிட்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து அவர்களை தேடி பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

அவர்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேடி வருகிறார்கள். போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் தேடி வரும் 3 பேர் சிக்கினால் மட்டுமே இந்த கொலை சம்பவத்தை செய்தது யார்? என்ற விவரமும், கொலைக்கான காரணமும் தெரியவரும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொலை செய்யப்பட்ட முனியசாமிக்கு வளர்மதி என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story