காந்திகிராம பல்கலைக்கழகத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு


காந்திகிராம பல்கலைக்கழகத்தில்  சமூக இடைவெளியை பின்பற்றி இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு
x
தினத்தந்தி 22 Sep 2020 10:00 PM GMT (Updated: 22 Sep 2020 4:43 PM GMT)

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

சின்னாளபட்டி,

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு பருவத்தேர்வுகளை வருகிற 30-ந்தேதிக்குள் நடத்தி முடிக்க பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி ஆன்லைன் மூலம் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் மட்டும் இறுதியாண்டு மாணவர்களுக்கு (ஆப்லைன்) நேரடி தேர்வு நேற்று தொடங்கியது.

வழக்கத்துக்கு மாறாக 3 மணி நேரத்துக்கு பதிலாக, ஒரு மணிநேரம் குறைக்கப்பட்டு 2 மணி நேரம் தேர்வு நடைபெறுகிறது. இளங்கலையில் 525 பேரும், முதுகலை படிப்பில் 450 பேரும் என மொத்தம் 975 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வில் பங்கேற்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது. காலை, மாலை என 2 வேளைகளும் தேர்வு நடைபெறுகிறது.

தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. உடலில் ஆக்சிஜன் அளவு பரிசோதிக்கப்பட்டது. ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரே வகையான முக கவசங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. தேர்வு முடியும் வரை முக கவசத்தை மாணவர்கள், கண்காணிப்பாளர்கள் கழற்ற அனுமதி கிடையாது. சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறது.

அதாவது, ஒரே நேரத்தில் 600 பேர் அமர்ந்து தேர்வு எழுதக்கூடிய அறையில் தற்போது 200 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். 6 அடிக்கு ஒரு மாணவர் வீதம் அமர்ந்து தேர்வு எழுதுகின்றனர். தேர்வு அறைக்குள் நுழையும் போது மாணவ-மாணவிகளின் கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. தேர்வு தொடங்கும் போதும், முடிந்த பிறகும் அறை முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது.

தமிழக சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி துணைவேந்தர் (பொறுப்பு) சுப்புராஜ், பதிவாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மணி மேற்பார்வையில் பல்வேறு குழுக் கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

Next Story