இ-பாஸ் வைத்திருந்தாலும் அனுமதி மறுப்பு: கேரள போலீஸ் சோதனை சாவடியை முற்றுகையிட்ட தமிழக விவசாயிகள் - இருமாநில எல்லையில் பரபரப்பு


இ-பாஸ் வைத்திருந்தாலும் அனுமதி மறுப்பு: கேரள போலீஸ் சோதனை சாவடியை முற்றுகையிட்ட தமிழக விவசாயிகள் - இருமாநில எல்லையில் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Sep 2020 10:15 PM GMT (Updated: 22 Sep 2020 5:04 PM GMT)

இ-பாஸ் வைத்திருந்தும் கேரளாவுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் போடிமெட்டில் உள்ள கேரள போலீஸ் சோதனை சாவடியை தமிழக விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனால் இருமாநில எல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.

போடி,

தேனி மாவட்டம் போடி, தேவாரம், கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் தோட்டம் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான விவசாயிகள் போடிமெட்டு மற்றும் கம்பம் மெட்டு மலைப்பாதைகள் வழியாக கேரளாவுக்கு சென்று வந்தனர். மேலும் இந்த ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சென்று வந்தனர்.

இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கேரள அரசு தமிழகத்தில் இருந்து தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் வருவதற்கு தடை விதித்தது. ஆனால் தற்போது மாநிலங்களுக்கு இடையிலான மின்னணு அனுமதி முறையை (இ-பாஸ்) மத்திய அரசு ரத்து செய்தது. இருப்பினும் கேரள அரசு சார்பில் தமிழகத்தில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் பெற்று வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. அதுவும், குமுளி சோதனை சாவடி வழியாக மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

இந்தநிலையில் போடிமெட்டு வழியாக செல்ல ஒருநாள் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து விவசாயிகள், தோட்ட தொழிலாளர்கள் நேற்று போடிமெட்டு மலைப்பாதை வழியாக கேரள மாநிலத்திற்கு செல்ல முயன்றனர். அப்போது போடிமெட்டு மலைப்பாதையில் உள்ள கேரள போலீசார், தமிழக விவசாயிகளை தடுத்து நிறுத்தினர்.

போடிமெட்டில் உள்ள கேரள சோதனை சாவடியில் கொரோனா பரிசோதனை மையம் இல்லை என்றும், குமுளி சோதனை சாவடி வழியாக செல்லுமாறும் போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் இந்த பாதை வழியாக செல்லவில்லை என்றால், சுமார் 200 கி.மீ. தூரம் வரை சுற்றிச் செல்ல வேண்டும் என்பதால் விவசாயிகள், தோட்ட தொழிலாளர்கள் கேரள சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இ-பாஸ் வைத்திருந்தும் அனுமதி மறுக்கப்பட்டதால் விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர். மேலும் அவர்களது வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நிறுத்தப்பட்டன.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார் போடிமெட்டு சோதனை சாவடிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். கேரள சோதனை சாவடியில் உள்ள போலீசாரிடமும் தமிழக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, ஒருநாள் மட்டும் போடிமெட்டு மலைப்பாதை வழியாக சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு, விவசாயிகள், தோட்ட தொழிலாளர்கள் கேரளாவுக்கு சென்றனர். இந்த போராட்டத்தால் இருமாநில எல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story