ஓராண்டு ஆகியும் இடைத்தரகர் சிக்கவில்லை; கைதானவர்கள் ஜாமீனில் சென்றனர் - நீர்த்து போன ‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு


ஓராண்டு ஆகியும் இடைத்தரகர் சிக்கவில்லை; கைதானவர்கள் ஜாமீனில் சென்றனர் - நீர்த்து போன ‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு
x
தினத்தந்தி 23 Sept 2020 3:30 AM IST (Updated: 22 Sept 2020 11:16 PM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு விசாரணை தொடங்கி ஓராண்டு ஆகியும், அதில் தொடர்புடைய இடைத்தரகர் இன்னும் சிக்காத நிலையில், கைதானவர்கள் ஜாமீனில் சென்றனர். இதனால் இந்த வழக்கு நீர்த்து போனதா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தேனி, 

மருத்துவ படிப்பில் மாணவ- மாணவிகள் சேர்க்கைக்கான தகுதித்தேர்வாக ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் முறைகேடு நடக்காமல் இருக்க கடுமையான கட்டுப்பாடுகளுடன் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மாணவிகள் மூக்குத்தி, கம்மல் அணிந்து செல்லவும், துப்பட்டா அணிந்து செல்லவும் கூட தடை விதிக்கப்படுகிறது.

இவ்வளவு கடுமையான கட்டுப்பாடுகளுடன் தேர்வு நடத்தப்பட்ட போதிலும் கடந்த ஆண்டு நடந்த தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதும், அவ்வாறு ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து வந்ததும் தெரியவந்தது. அதன்படி, ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா என்பவர் முதலில் சிக்கினார்.

இதுகுறித்து தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்து மாணவர் உதித்சூர்யா, அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகிய 2 பேரையும் முதலில் கைது செய்தனர். அவர்களை தொடர்ந்து மேலும் பலர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். அந்த வகையில் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் 5 மாணவர்கள், ஒரு மாணவி, மாணவர்களின் பெற்றோர் 6 பேர், இடைத்தரகர்கள் 3 பேர் என மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். இதற்கிடையே 2018-ம் ஆண்டு ‘நீட்’ தேர்விலும் ஆள்மாறாட்டம் நடந்தது தெரியவந்தது. அதுதொடர்பாக சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிலரை கைது செய்தனர்.

தேனியில் பதிவு செய்யப்பட்ட ஆள்மாறாட்ட வழக்கில் முக்கிய இடைத்தரகராக கருதப்படும் ரஷீத் என்பவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதே இடைத்தரகர் ரஷீத் மூலமாக தான் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு, முறைகேடாக மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த தகவல் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைக்கப்பெற்றது. ஆனால், ஓராண்டு ஆகியும் இன்னும் ரஷீத்தை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இதேபோல், முறைகேடாக மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களை கைது செய்த போலீசார், இந்த மாணவர்களுக்கு பதில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய நபர்களில் ஒருவரை கூட இன்னும் கைது செய்யவில்லை. இதனால் ‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு நீர்த்து போய்விட்டதா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கிடையே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், இந்த வழக்கு விசாரணை முடங்கியது. தற்போதும் இந்த வழக்கு விசாரணை முடங்கிக் கிடப்பதாக கூறப்படுகிறது. எனவே, இந்த வழக் கில் தலைமறைவாக உள்ளவர்களையும், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கண்டுபிடித்து, முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story