கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் திராட்சை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை - கிலோ ரூ.20-க்கு விற்பனை


கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் திராட்சை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை - கிலோ ரூ.20-க்கு விற்பனை
x
தினத்தந்தி 23 Sept 2020 4:00 AM IST (Updated: 23 Sept 2020 12:04 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் திராட்சை விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கிலோ ரூ.20-க்கு மட்டுமே விற்பனையாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

உத்தமபாளையம், 

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணதேவன்பட்டி, ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, கா.புதுப்பட்டி, சின்னஓவுலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை, தென்னை நெல் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கருப்பு பன்னீர் திராட்சை சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே ஆண்டு முழுவதும் திராட்சைப்பழம் கிடைக்கும் இடமாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதி திகழ்கிறது. இங்கு விளையும் திராட்சை பழங்கள் மதுரை, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களுக்கும், அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிக அளவில் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ திராட்சை ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருக்கும் திராட்சை பழங்கள் மழையால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் கேட்கும் விலைக்கே விவசாயிகள் திராட்சை பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி, தற்போது ஒரு கிலோ திராட்சை ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. திராட்சை விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறும் விவசாயிகள், விவசாயத்துக்கு செலவு செய்த தொகையை கூட இதனால் எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தொடர் மழை காரணமாக திராட்சை பழத்தை கொடியிலேயே பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொடியில் நன்கு பழுத்த பழம் 2 நாட்கள் கூட தாக்குப்பிடிக்காமல் அனைத்தும் அழுகிவிடும். இதனை பயன்படுத்தி கொண்டு வியாபாரிகள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு பழங் களை கொள்முதல் செய்கின்றனர். ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு மனித வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. அப்படி இருந்தும் கடன் வாங்கி நாங்கள் விவசாயம் செய்தோம். ஆனால் விலை வீழ்ச்சியால் விவசாயத்துக்கு செலவு செய்த தொகையை கூட எடுக்க முடியவில்லை. இதனால் திராட்சை விவசாயிகள் பலரும் கவலை அடைந்துள்ளனர். எனவே திராட்சை பழங்களை பதப்படுத்தி வைக்க குளிர்பதன கிடங்கு அமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story