இரணியல் அருகே சோகம்: மனைவியை கொடூரமாக கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு


இரணியல் அருகே சோகம்: மனைவியை கொடூரமாக கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு
x
தினத்தந்தி 23 Sept 2020 5:30 AM IST (Updated: 23 Sept 2020 1:35 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை கொடூரமாக கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். குடும்ப தகராறில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இரணியல் அருகே நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

பத்மநாபபுரம்,

குமரி மாவட்டம் இரணியல் அருகே குருந்தன்கோடு ஆசாரிவிளையை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 42). தேங்காய் வெட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கும், இரணியல் தோப்புவிளையை சேர்ந்த தங்கம் (37) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மகிழ்ச்சியான இவர்களது வாழ்க்கைக்கு சாட்சியாக ராகுல் (11) என்ற மகனும், தனுஷியா (10) என்ற மகளும் உள்ளனர். உன்னம்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் ராகுல் 6-ம் வகுப்பும், தனுஷியா 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

திருமணமான சில ஆண்டுகளில் ராஜசேகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஆரம்ப காலத்தில் மது குடித்தாலும், வீட்டுக்கு வந்து தகராறு செய்யாமல் சாப்பிட்டு விட்டு தூங்கி விடுவாராம். நாளடைவில் ராஜசேகரன் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ராஜசேகரனுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. ஏதாவது வேலைக்கு சென்றாலும் கிடைக்கும் கொஞ்ச வருமானத்தையும் மது குடிப்பதற்கே செலவு செய்து விடுவாராம். இதனால் குடும்பம் நடத்த முடியாமல் ராஜசேகரனின் மனைவி மிகுந்த சிரமப்பட்டார்.

எனவே கணவரை நம்பாமல் தானும் வேலைக்கு செல்வது என தங்கம் முடிவு செய்தார். மனைவியின் முடிவுக்கு ராஜசேகரன் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் எங்கும் வேலைக்கு செல்லக்கூடாது எனவும் கண்டிப்புடன் கூறினார். வீட்டுச்செலவை மனதில் கொண்டு கடந்த சில நாட்களாக தங்கம் அந்த பகுதியில் உள்ள முந்திரி ஆலைக்கு வேலைக்கு சென்றார். தங்கம் வேலைக்கு செல்ல தொடங்கிய பிறகு தினமும் வீட்டில் கணவன்- மனைவி இடையே தகராறு நடந்ததாக தெரிகிறது.

நேற்றுமுன்தினம் மாலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு தங்கம் வீட்டுக்கு வந்தார். இரவு வீட்டில் பிள்ளைகளுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். மதுபோதையில் வந்த ராஜசேகரன், வேலைக்கு செல்வது தொடர்பாக மனைவியிடம் தகராறு செய்ததுடன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் ராஜசேகரன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தூங்க சென்று விட்டார். தங்கம் இன்னொரு அறையில் தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவில் கண்விழித்த ராஜசேகரன், மனைவியின் அறைக்கு வந்தார். அங்கு தங்கம் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். நம் சொல் பேச்சு கேட்காமல் வேலைக்கு செல்கின்றாளே? என ஆத்திரம் அடைந்த ராஜசேகரன், தேங்காய் வெட்டுவதற்காக வைத்திருந்த அரிவாளை எடுத்தார். கட்டிய மனைவி என்று கூட பாராமல் மனதை கல்லாக்கிக் கொண்டு தங்கம் கழுத்தை ஆட்டை அறுப்பது போன்று அறுத்ததாக கூறப்படுகிறது. ரத்தவெள்ளத்தில் துடிதுடித்த தங்கம் படுக்கையிலேயே பிணமானார்.

மனைவியை கொன்ற ராஜசேகரன் வீட்டின் இன்னொரு பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நள்ளிரவில் திடீரென கண்விழித்த குழந்தைகள் தங்களுடன் படுத்திருந்த தந்தையை காணாமல் திடுக்கிட்டன. இருவரும் எழுந்து வந்தனர். அங்கு தந்தை தூக்கில் பிணமாக தொங்கினார். தாயை தேடி சென்ற போது ரத்தவெள்ளத்தில் தாய் பிணமாக கிடந்தாள்.இரண்டு குழந்தைகளும் அலறி துடித்தன. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது. இதுபற்றி இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குடும்ப தகராறில் மனைவியை கொடூரமாக கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் இரணியல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story