குமரியில் தொடரும் மழை: மாம்பழத்துறையாறு அணை நிரம்பியது - மயிலாடியில் 90 மி.மீ. பதிவு
குமரி மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மாம்பழத்துறையாறு அணை நிரம்பியது. அதிகபட்சமாக மயிலாடியில் 90 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை நீடித்து வருகிறது. நாகர்கோவிலில் நேற்று காலையில் இருந்து மழை விட்டு, விட்டு பெய்தது. இதே போல் தக்கலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், கடலோர கிராமங்கள், மலையோரம் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து சாரல் மழை நீடித்தது.
மார்த்தாண்டம் பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குழித்துறை தாமிரபரணி ஆற்றில் சப்பாத்து தடுப்பணை மீது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குழித்துறை ரெயில் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள நெடுவாலி குளத்தின் கரையில் நின்ற புளியமரம் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் வேரோடு சாய்ந்தது. இதனால் குளத்தின் கரையில் கட்டப்பட்டிருந்த பக்கச்சுவர் இடிந்தது. மழை தொடர்ந்து நீடித்தால் குளத்தின் கரையும் இடியும் அபாயம் உள்ளது. எனவே குளத்தில் விழுந்து கிடக்கும் புளியமரத்தை உடனே வெட்டி அப்புறப்படுத்தி, கரையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல் அறுவடை தாமதம் ஆகி வருகிறது. தாழக்குடி பகுதியில் நெல் அறுவடைக்காக சின்ன சேலத்தில் இருந்து 2 அறுவடை எந்திரங்கள் வந்தன. அவற்றை ஏற்றி வந்த லாரி சீதப்பால் செல்லும் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் லாரியின் அருகே நின்ற 100 ஆண்டு பழமையான ஆலமரத்தின் பெரிய கிளை முறிந்து லாரி மீது விழுந்தது. இதில் லாரி நொறுங்கி சேதம் அடைந்தது. அந்த சமயத்தில் லாரியில் டிரைவர் இல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து மரக்கிளையை வெட்டி அகற்றும் பணி நடந்தது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இதைத்தொடர்ந்து மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி நிரம்பியது. இந்த அணைக்கு வரும் தண்ணீர் மறுகால்வழியாக திறந்து விடப்படுகிறது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,123 கன அடி தண்ணீர் வருகிறது. இதன் மூலம் அணையின் நீர் மட்டம் 32.65 அடியாக உயர்ந்து உள்ளது. பெருஞ்சாணி அணைக்கு 1,453 கன அடி தண்ணீர் வருகிறது. இதைத்தொடர்ந்து அணையின் நீர் மட்டம் 68.88 அடியானது. சிற்றார்-1 அணைக்கு 25.8 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் அணையின் நீர் மட்டம் 11.31 அடியாகவும். சிற்றார்-2 அணையின் நீர் மட்டம் 11.41 அடியாகவும், முக்கடல் அணையின் நீர் மட்டம் 17.8 அடியாகவும், பொய்கை அணையின் நீர் மட்டம் 9.70 அடியாகவும் உள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 163 கன அடியும், சிற்றார்-1 அணையில் இருந்து 100 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 90 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-
பூதப்பாண்டி- 16.2, சிற்றார் 1- 38.6, களியல்- 28.56, கன்னிமார்- 36.2, கொட்டாரம்- 52.4, குழித்துறை- 36.2, நாகர்கோவில்- 54.8, பேச்சிப்பாறை- 32, புத்தன்அணை- 32, பெருஞ்சாணி- 40.4, சிற்றார் 2- 28, சுருளோடு- 44.4, தக்கலை- 48, குளச்சல்- 24.6, இரணியல்- 36, மாம்பழத்துறையாறு- 42, ஆரல்வாய்மொழி- 12, கோழிப்போர்விளை- 45, அடையாமடை- 33, குருந்தன்கோடு- 40, முள்ளங்கினாவிளை- 47, ஆனைகிடங்கு- 45.4, முக்கடல் அணை- 18 என மழை பதிவாகி இருந்தது.
இந்த மழையால் ரப்பர்பால் வெட்டும் தொழிலுடன், செங்கல் தயாரிக்கும் தொழிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
மழையின் காரணமாக அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story