நாகர்கோவிலில் பரபரப்பு: கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி - போலீசார் தடுத்து நிறுத்தினர்


நாகர்கோவிலில் பரபரப்பு: கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி - போலீசார் தடுத்து நிறுத்தினர்
x
தினத்தந்தி 22 Sep 2020 11:00 PM GMT (Updated: 2020-09-23T01:57:54+05:30)

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்றதை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று ஏராளமானோர் மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது நாகர்கோவில் அருகே மேலப்பெருவிளை வடக்கு ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த முத்துசாமி(வயது 67) என்பவர் மனைவி தாமாட்சியுடன் மனு அளிக்க வந்திருந்தார். அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டு இருந்தார். திடீரென முத்துசாமி, தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்தார். கண் இமைக்கும் நேரத்தில் தனது உடலிலும், மனைவி தாமாட்சியின் உடலிலும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பிடுங்கி, தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்கள் இருவர் மீதும் தண்ணீரை ஊற்றி சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், முத்துசாமி, அப்பகுதியில் உள்ள நிலத்தை விலைக்கு வாங்கி வீடு கட்டி உள்ளார். இதுதொடர்பாக முத்துசாமிக்கும் அதேபகுதியை சேர்ந்த ஒருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில், அந்த நபர், முத்துசாமி, அவருடைய மனைவி தாமாட்சியிடமும் தகராறு செய்துள்ளார். மேலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுபற்றி முத்துசாமி ஆசாரிபள்ளம் போலீசில் புகார் செய்தார். ஆனாலும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் அந்த நபர் புகாரை வாபஸ் பெறாவிட்டால், வீட்டை இடித்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதுகுறித்து போலீஸ் நிலையத்திலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் அளித்தனர். ஆனாலும் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மன வேதனை அடைந்த அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த போது தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story