முன்னாள் அமைச்சர் பச்சைமால், 5 அரசு ஊழியர்களுக்கு கொரோனா - ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை


முன்னாள் அமைச்சர் பச்சைமால், 5 அரசு ஊழியர்களுக்கு கொரோனா - ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
x
தினத்தந்தி 23 Sept 2020 3:30 AM IST (Updated: 23 Sept 2020 2:09 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் பச்சைமால் மற்றும் 5 அரசு ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினசரி 150-க்கும் மேலாக இருந்து வந்தது. தற்போது 100-க்கும் குறைவாக உள்ளது. கொரோனாவை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் தொற்றை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. குமரியில் ஏற்கனவே 2 எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், போலீசார் என ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பச்சைமாலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை முடிவு நேற்று வந்தது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேபோல் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய பெண் ஊழியர் உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. மேலும் கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகத்திலும், ஊரக வளர்ச்சி அலுவலகத்திலும் பணியாற்றிய 2 ஊழியர்களுக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதையடுத்து கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பீளிச்சிங் பவுடர் தூவப்பட்டது.

நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியில் உள்ள ஆயுதப்படையில் பணியாற்றும் 4 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Next Story