மேட்டூர் அணை கோட்டம் சார்பில் ரூ.2½ கோடியில் குடிமராமத்து பணிகள் - கலெக்டர் ராமன் தகவல்


மேட்டூர் அணை கோட்டம் சார்பில் ரூ.2½ கோடியில் குடிமராமத்து பணிகள் - கலெக்டர் ராமன் தகவல்
x
தினத்தந்தி 23 Sept 2020 4:30 AM IST (Updated: 23 Sept 2020 2:13 AM IST)
t-max-icont-min-icon

பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் மேட்டூர் அணை கோட்டம் சார்பில் இந்த ஆண்டு ரூ.2½ கோடி மதிப்பில் 7 குடி மராமத்துப்பணிகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

சேலம், 

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டத்திற்குட்பட்ட டேனிஸ்பேட்டை கிராமத்தில் உள்ள பாலமேடு அணைக்கட்டு, கே.என்.புதூர் கிராமத்தில் உள்ள பெரிய சக்கிலிச்சி ஏரி வரத்து வாய்க்கால் மற்றும் கு.குட்டப்பட்டி கிராமத்தில் உள்ள ராகவாம்பாள் அணைக்கட்டு ஆகியவை விவசாயிகளின் பங்களிப்போடு குடிமராமத்து திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கலெக்டர் ராமன் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2016-17ஆம் ஆண்டில் ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் 48 குடிமராமத்து பணிகளும், 2017-18 ஆம் ஆண்டில் ரூ.9.79 கோடி மதிப்பீட்டில் 31 குடிமராமத்து பணிகளும், 2019-20ஆம் ஆண்டில் ரூ.5.63 கோடி மதிப்பீட்டில் 20 குடிமராமத்து பணிகளும் என மொத்தம் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.18.62 கோடி மதிப்பீட்டில் 99 குடிமராமத்து பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மழைக்காலங்களில் கிடைக்கின்ற நீர் வீணாகாமல் சேமித்து வைத்து குடிநீர் தேவைகளை நிறைவேற்றிடவும், விவசாய பணிகளுக்கும் இந்நீர் பெரிதும் பயன்பெற்று வருகிறது. இத்திட்டம் அரசு 90 சதவீத நிதியுதவியும், அந்தந்த பாசனதாரர்கள் சங்கங்களின் சார்பில் 10 சதவீத நிதி பங்களிப்புடனும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இக்குடிமராமத்து திட்டம் அனைவராலும் வரவேற்கப்பட்டு விவசாயிகளே ஒன்றிணைந்து இத்திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி வருகின்றார்கள்.

முதல்-அமைச்சர் ஆணையின்படி, இந்த ஆண்டில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறையின் மேட்டூர் அணைக் கோட்டம் சார்பில் காடையாம்பட்டி வட்டம் கு.குட்டப்பட்டி கிராமத்தில் உள்ள ராகவாம்பாள் அணைக்கட்டு ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தும் பணியும், டேனிஸ்பேட்டை கிராமத்தில் உள்ள பாலமேடு அணைக்கட்டின் பாசன கால்வாய் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தும் பணியும், கே.என்.புதூர் கிராமம் பெரிய சக்கிலிச்சி ஏரியின் வரத்து வாய்க்கால் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தும் பணியும் உள்பட மொத்தம் ரூ.2.47 கோடி மதிப்பீட்டில் 953.86 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 7 குடிமராமத்து திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறையின் மேட்டூர் அணைக் கோட்ட செயற்பொறியாளர் தேவராஜன், தாசில்தார் அண்ணபூரணி, மேட்டூர் அணைக்கோட்ட உதவி செயற்பொறியாளர் விஜயராகவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருணாநிதி, மலர்விழி, டேனிஷ்பேட்டை பாலமேடு அணைக்கட்டு நீர் பாசன விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பாசனதாரர்கள் சங்க பிரதிநிதிகள், பொதுப்பணித்துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story