பிரதமர் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு: உதவி வேளாண்மை அலுவலர் உள்பட 2 பேர் கைது - சேலம் சி.பி.சி.ஐ.டி போலீசார் அதிரடி நடவடிக்கை


பிரதமர் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு: உதவி வேளாண்மை அலுவலர் உள்பட 2 பேர் கைது - சேலம் சி.பி.சி.ஐ.டி போலீசார் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 23 Sept 2020 4:30 AM IST (Updated: 23 Sept 2020 2:13 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக உதவி வேளாண்மை அலுவலர் உள்பட 2 பேரை சேலம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சேலம், 

விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதமரின் வேளாண்மை நிதி உதவி திட்டம் (கிசான்) என்ற பெயரில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் என்ற போர்வையில் போலியான பெயர்களை சேர்த்து தமிழகத்தில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

சேலம் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் நடந்துள்ள மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சேலம் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டதாக 51 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் போலியாக ஆவணங்கள் தயாரித்து கொடுத்த தனியார் கணினி மையத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். மேலும் விசாரணையில் சேலம் மாவட்டத்தில் மட்டும் இந்த திட்டம் மூலம் ரூ.6 கோடி வரை மோசடி நடந்து இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையொட்டி சேலம், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மோசடி செய்த பணத்தை வசூலிக்கும் பணியில் வேளாண்மை துறை அலுவலர்கள், சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி இதுவரை ரூ.2 கோடியே 63 லட்சம் வசூலித்து உள்ளனர். மீதி பணத்தை வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் பிரதமர் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சேலம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் நேற்று காலை சென்றனர். அங்கு அவர்கள் அலுவலரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

அதேபோல் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண் அலுவலகத்திலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று தீவிர விசாரை-ணை நடத்தினர். இதையடுத்து பிரதமர் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அந்த அலுவலகத்தில் பணிபுரியும் உதவி வேளாண்மை அலுவலர் அன்பழகன் (வயது 50), இதே அலுவலகத்தில் கார் டிரைவரான பிரகாஷ் (33) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள பிரகாஷ் தற்காலிக கார் டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட அன்பழகனின் சொந்த வீடு ஆத்தூரில் உள்ளது. அங்கு சென்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.98 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள பிரகாஷ் பேசியதாக ஆடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் சேலம் வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரகாசிடம் பணம் கொடுத்ததாகவும், அந்த பணத்தை அவர் வேளாண்மை அதிகாரிகளிடம் கொடுத்ததாகவும், கொடுத்த பணத்தை தற்போது திரும்ப பெற்றுத்தர முடியாது. சிறிது காலம் பொறுத்துக்கொள்ளுங்கள். தற்போது போலீசார் விசாரணை நடத்தி கொண்டு உள்ளனர். பொறுமையாய் இருங்கள் பிரச்சினை எல்லாம் முடியட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்பது போன்று அவர் பேசிய ஆடியோ வைரலாக பரவி வருகிறது.

இது குறித்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நேற்று காலை சேலம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை அலுவலகம் ஆகிய இடங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story