கடைக்கு சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 வாலிபர்களை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு - பெரியநாயக்கன்பாளையத்தில் பரபரப்பு


கடைக்கு சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 வாலிபர்களை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு - பெரியநாயக்கன்பாளையத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Sept 2020 4:00 AM IST (Updated: 23 Sept 2020 2:23 AM IST)
t-max-icont-min-icon

பெரியநாயக்கன்பாளையத்தில் கடைக்கு சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோவை,

கோவை நகரில் தனியாக நடந்து செல்லும் பெண்கள், மூதாட்டிகளிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்பட பலரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து நகை பறிப்பு குற்றங்கள் அதிகரித்து வருவதால் நகைகளை அணிந்து வெளியே செல்வதற்கே பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாந்திமேட்டை சேர்ந்த ரத்தினம் (வயது 35) என்ற பெண் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ரத்தினம் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனை பார்த்து உஷாரான ரத்தினம் நகையை கையில் பிடித்தபடி, வாலிபர்களை மோட்டார் சைக்கிளில் இருந்து தள்ளிவிட்டார். இதில் நிலைதடுமாறி 2 வாலிபர்களும் கீழே விழுந்தனர். பின்னர் ரத்தினம் திருடன்.. திருடன்.. என்று கூச்சல்போட்டார்.

இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தப்பிக்க முயன்ற 2 வாலிபர்களையும் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அந்த 2 வாலிபர்களை மின் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து பொதுமக்கள் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் வாலிபர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.

விசாரணையில் பிடிபட்ட வாலிபர்கள் போத்தனூரை சேர்ந்த அப்துல் ரவூப் (21) , ரசூல் (20) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது ஏராளமான நகை பறிப்பு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நகை பறிப்பு ஆசாமிகளுடன் வீரத்துடன் போராடிய ரத்தினத்தையும், மடக்கிப் பிடித்தவர்களையும் போலீசார் பாராட்டினார்கள். பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்களை மடக்கிப்பிடித்து கட்டி வைத்த சம்பவம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story