பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வு: கோவை மாவட்டத்தில் 1,225 பேர் எழுதினர்
பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வுகளை கோவை மாவட்டத்தில் 1,225 பேர் எழுதினர்.
கோவை,
கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு ஆகியவை ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் தனித்தேர்வர்களுக்கான பிளஸ்-1, பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் எட்டாம் வகுப்பு, தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு ஆகவே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுகள் அனைத்தும் 22-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி நேற்று பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது.
கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத 30 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தேர்வு எழுத மாவட்டம் முழுவதும் இருந்து மொத்தம் 1,459 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 234 பேர் தேர்வு எழுத வரவில்லை. 1,225 பேர் தேர்வு எழுதினர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது,
கொரோனா தொற்று காரணமாக பொதுத்தேர்வு எழுத வந்த தனித்தேர்வர்கள் அனைவரின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தேர்வு எழுத வந்த அனைவருக்கும் முக கவசம் வழங்கப்பட்டது. அவர்களுக்கு கிருமிநாசினி வழங்கி கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தினோம். தேர்வர்கள் அனைவரும் சமூக இடைவெளிவிட்டு அமர்ந்து தேர்வு எழுதினர். பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்களுக்கு மொழித்தாள் தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வு எழுத மாவட்டம் முழுவதும் 30 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் பிளஸ்-2 புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வு எழுத 174 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 156 பேர் தேர்வு எழுதினர். 18 பேர் தேர்வு எழுத வரவில்லை. பழைய பாடத்திட்டத்தின்படி தேர்வு எழுத 27 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 23 பேர் தேர்வு எழுதினர். 4 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வு எழுத மாற்றுத்திறனாளிகள் 5 பேர் விண்ணப்பித்து இருந்தனர் இவர்கள் அனைவரும் நேற்று தேர்வு எழுதினர்.
கோவையில் புதிய பாடத்திட்டத்தின்படி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத 458 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 381 பேர் தேர்வு எழுதினர். 77 பேர் தேர்வு எழுத வரவில்லை. புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வு எழுத 742 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 610 பேர் தேர்வு எழுதினர்.132 பேர் தேர்வு எழுதவில்லை. மாற்றுத்திறனாளிகளில் 53 பேர் விண்ணப்பித்ததில், 50 பேர் எழுதினர். 3 பேர் வரவில்லை. பிளஸ் 1 தனித் தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story