நீலகிரியில் தொடர் மழையால் மரங்கள் விழுந்தன; சாலைகளில் மண் சரிவு - நிவாரண முகாம்களில் 69 குடும்பத்தினர் தங்க வைப்பு
தொடர் மழையால் நீலகிரியில் மரங்கள் விழுந்தன. பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இத்தலார் நிவாரண முகாம்களில் 69 குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்வதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மரங்கள் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள் சேதம் அடைந்ததால் நகர் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ஊட்டி நகரமே இருளில் மூழ்கியது. ஊட்டி பட்பயர், பிங்கர்போஸ்ட், எச்.பி.எப். சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் போதிய வெளிச்சம் இல்லை. இது குறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் டார்ச் லைட் வெளிச்சத்தில் மின் வாள் கொண்டு மரங்களை துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மரங்களை அகற்றும் பணி நடந்தது. நேற்று மதியம் ஊட்டி மான் பூங்கா சாலையில் மரம் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. இதில் மின்கம்பம் ஒன்று சேதம் அடைந்தது. ஊட்டி-இத்தலார் சாலை எல்லக்கண்டி பகுதியில் மண் சரிந்து சாலையில் விழுந்தது. சிறிய மரங்களும் விழுந்தன. ஊட்டி அருகே இத்தலார் பகுதியில் மழையால் பாதிக்கப்படுபவர்கள் தங்க தற்காலிகமாக நிவாரண முகாம்கள் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இதற்கிடையே கடந்த ஆகஸ்ட்டு மாதம் பெய்த கனமழையால் எமரால்டு, இத்த லார் பகுதிகளில் பல வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. இதை அடுத்து வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலில் எமரால்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். தொடர்ந்து பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்ததால் புதிதாக கட்டப்பட்ட நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.
தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் அவர்கள் தொடர்ந்து அங்கேயே தங்க வைக்கப்பட்டு உள்ளனர். நேற்று பெரியார் நகரை சேர்ந்த 13 குடும்பத்தினர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். இதனை தொடர்ந்து அங்கு 69 குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் எம்.ஜி.ஆர். நகர், இந்திரா நகர், வினோபாஜி நகரை சேர்ந்தவர்கள். கடந்த ஆகஸ்டு மாதம் வீசிய சூறாவளி காற்றில் நிவாரண முகாமின் மேற்பகுதியில் போடப்பட்டிருந்த மேற்கூரை காற்றில் பறந்தது. தற்போது மேற்கூரை போடப்பட்டு காற்றில் பறக்காதவரறு கற்கள் வைக்கப்பட்டு உள்ளது. கனமழையால் மக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டாலும், அங்கு போதிய அளவு வசதிகள் இல்லை. வீடுகளின் மேற்கூரையில் இருந்து மழை நீர் ஒழுகி கொண்டே இருக்கிறது. இதனால் கடும் குளிரிலும் மக்கள் தங்கி உள்ளனர். வீட்டுக்குள் தண்ணீர் ஒழுகாமல் இருக்க மேற்கூரையை ஒட்டி தார்ப்பாய் போட்டு இருக்கின்றனர். வீட்டில் ஒழுகும் நீரை சாக்கு கொண்டு துடைத்து எடுக்கின்றனர். கடும் குளிர் காரணமாக வீட்டிற்குள் நெருப்பு போட்டு குளிர் காய்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கனமழையால் எங்களது வீடுகள் சேதம் அடைந்ததை தொடர்ந்து நாங்கள் புதிதாக கட்டப்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டோம். இங்கு அவசர அவசரமாக பணிகள் முடிக்கப்பட்டதால் மேற் கூரை ஒழுகிய வண்ணம் உள்ளது. கைக்குழந்தைகள், பெரியவர்களை கவனிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். தண்ணீர், கழிப்பறை வசதி போன்றவை இருந்தாலும் வாகனங்கள் வர முடியவில்லை. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சாலையில் இருந்து மலை உச்சிக்கு தூக்கி வர வேண்டிய நிலை உள்ளது.
நாங்கள் தினக்கூலி வேலை செய்து வருவதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வருகிறோம். தற்போது நிவாரண முகாம்களில் தங்கி வந்தாலும் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக விரைவில் வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-21.1, நடுவட்டம்-27, அவலாஞ்சி-114, எமரால்டு-30, அப்பர்பவானி-64, பாலகொலா-31, கேத்தி-11, கூடலூர்-10, தேவாலா -26, ஓவேலி-23, பந்தலூர்-108, சேரங்கோடு-86 உள்பட மொத்தம் 624.2 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 21.52 ஆகும்.
கூடலூர் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த சூறாவளி காற்று, மழை காணப்படுகிறது. இதனால் கடும் குளிர் நிலவுகிறது. இதைத்தொடர்ந்து பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பிகள் சேதம் அடைந்து வருகிறது. இதனால் போக்குவரத்து மற்றும் மின்சார வினியோகமும் பாதிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய,விடிய பலத்த சூறாவளிக்காற்று மற்றும் மழை பெய்தது. நேற்று காலை 7 மணிக்கு கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட சிபுரம் பகுதியில் ராட்சத மரம் சரிந்து விழுந்தது. இதனால் கூடலூர் செல்லும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மரத்தை அறுத்து அகற்றினர். அதன் பின்னரே போக்குவரத்து சீரானது. பின்னர் காலை 8 மணிக்கு கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தலைமை தபால் நிலையம் அருகே மரம் ஒன்று சரிந்து விழுந்தது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாதபடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் சென்ற மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தொடர்ந்து கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையில் உள்ள கோழி பாலம் என்ற இடத்தில் பகல் 12 மணிக்கு மரம் சரிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் நேரில் சென்று மரத்தை அறுத்து அகற்றினர். சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. இதேபோல் பந்தலூர் தாலுகா பகுதியிலும் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தது. இதனால் கூடலூர் பந்தலூர் பகுதியில் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story