கே.வி.குப்பம் பகுதியில் சாலையில் தொடர் வேகத்தடையால் வாகன ஓட்டிகள் அவதி


கே.வி.குப்பம் பகுதியில் சாலையில் தொடர் வேகத்தடையால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 23 Sept 2020 4:00 AM IST (Updated: 23 Sept 2020 2:43 AM IST)
t-max-icont-min-icon

கே.வி.குப்பம் பகுதியில் சாலையில் உள்ள தொடர் வேகத்தடையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

கே.வி.குப்பம், 

கே.வி.குப்பம்-காட்பாடி இடையே கே.வி.குப்பம், வேப்பங்கநேரி, வடுகந்தாங்கல் ஆகிய பகுதிகளில் சாலையின் இருபுறமும் தொடர்ச்சியாக ஒவ்வொரு பகுதியிலும் 10 வேகத்தடைகள் என ஒரு வழிச் சாலைகளின் இரு பகுதிகளிலும் ஆங்காங்கே வேகத்தடைகள் உள்ளன. வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகள் எதுவும் வைக்கப்படாமல் உள்ளன.

இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். சிலர் தடுமாறி கீழே விழுகின்றனர். ஆம்புலன்சில் கொண்டு செல்லப்படும் நோயாளிகள், பிரசவத்துக்கு செல்லும் கர்ப்பிணிகள் ஆகியோர் தொடர் இன்னலை சந்திக்கின்றனர்.

சாலையில் உள்ள தொடர் வேகத்தடைகளை தவிர்ப்பதற்காக அடிக்கடி வந்து செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவழி பாதையின் எதிர் புறமாக வேகத்தடை இல்லாத பகுதிகளில் எதிரும் புதிருமாக பயணம் செய்கின்றனர். இதனால் ஒருவழி பாதை அமைத்தும் பயனில்லாமல் போகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. ஒருசில இடங்களில் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டுள்ள 10 வேகத்தடைகளில் சிலவற்றை பொதுமக்களே அகற்றி விட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

சாலையில் வேகத்தடை அவசியம் தான். ஆனால் போதிய இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக 10 வேகத்தடைகளை வைத்தால் அந்த வழியாக நோயாளிகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்களை இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் அழைத்துச் செல்வோர் மிகுந்த மன உளைச்சலுக்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகி வருகின்றனர்.

எனவே இப்பகுதியில் உள்ள அளவுக்கு அதிகமான வேகத் தடைகளை அகற்றி, தேவை உள்ள இடங்களில் மட்டுமே வேகத்தடைகளை அமைத்து, அறிவிப்புப் பலகையுடன், எச்சரிக்கை அடையாளங்களுடன் பயணிகளுக்கு தொந்தரவு இல்லாத வகையில் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story