நடிகை கங்கனா ரணாவத் வழக்கில் சஞ்சய் ராவத் எதிர்தரப்பு மனுதாரராக சேர்ப்பு
நடிகை கங்கனா ரணாவத் வழக்கில் சஞ்சய் ராவத் எதிர்தரப்பு மனுதாரராக சேர்க்கப்பட்டார்.
மும்பை,
நடிகை கங்கனா ரணாவத் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறியதால் அவருக்கும் மாநிலத்தை ஆளும் சிவசேனாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி பாந்திராவில் உள்ள கங்கனாவின் பங்களா வீட்டில் சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்ததாக கூறி மாநகராட்சி அதை இடித்து தள்ளியது.
இந்தநிலையில் மாநகராட்சியின் நடவடிக்கை சட்டவிரோதம் என உத்தரவிடக்கோரி மும்பை ஐகோர்ட்டில் கங்கனா மனுதாக்கல் செய்தார். மேலும் ரூ.2 கோடி இழப்பீடு கேட்டார்.
சஞ்சய் ராவத் சேர்ப்பு
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் காதவாலா, ஆர்.ஐ. சாக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது. அப்போது கங்கனா தரப்பு வக்கீல், சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கங்கனாவை மிரட்டுவது போல பேசிய டி.வி.டி.யை சமர்பித்தார். இதையடுத்து நீதிபதிகள் இதுகுறித்து சஞ்சய் ராவத்திடமும் பதில் கேட்க வேண்டியது இருக்கும் என கூறினர்.
எனவே கங்கனா தரப்பு வக்கீல், வழக்கில் சஞ்சய் ராவத்தையும் எதிர்தரப்பு மனுதாரராக சேர்க்க அனுமதி கேட்டார். இதையடுத்து நீதிபதிகள் கங்கனா மனு மீதான வழக்கில் சஞ்சய் ராவத்தை எதிர்தரப்பு மனுதாரராக சேர்த்தனர். இதேபோல மும்பை மாநகராட்சி எச்.வார்டு அதிகாரி பாக்யவந்த் லேட்டும் எதிர்தரப்பு மனுதாரராக சேர்க்கப்பட்டார்.
Related Tags :
Next Story