தேர்தல் பிரமாண பத்திரம் குறித்து விளக்கமளிக்க சரத்பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்


தேர்தல் பிரமாண பத்திரம் குறித்து விளக்கமளிக்க சரத்பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
x
தினத்தந்தி 22 Sep 2020 10:53 PM GMT (Updated: 22 Sep 2020 10:53 PM GMT)

தேர்தல் பிரமாண பத்திரம் குறித்து விளக்கமளிக்க சரத்பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மும்பை, 

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, அவரது மகனும், சுற்றுச்சூழல் மந்திரியுமான ஆதித்ய தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி. ஆகியோர் தேர்தல் வேட்பு மனுவில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு உள்ள சொத்துகள், கடன்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு சமீபத்தில் வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பியது.

இந்தநிலையில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள சரத்பவாருக்கும் தேர்தல் பிரமாண பத்திரம் தொடர்பாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய தகவல் வெளியானது.

இதுகுறித்து சரத்பவாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் பதிலளித்து கூறுகையில், “எனக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் திங்கட்கிழமை கிடைத்தது. அதில் தேர்தல் வேட்பு மனுவில் நான் செய்த பிரமாண பத்திரம் குறித்து விளக்கம் கேட்டு உள்ளனர். மற்ற எல்லா உறுப்பினர்களை விட எங்கள் மீது அவர்கள் (மத்திய அரசு) அன்பு வைத்திருப்பதால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். தேர்தல் கமிஷன் கேட்டு கொண்ட பிறகு வருமான வரித்துறை எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நாங்கள் நோட்டீசுக்கு பதில் அளிப்போம்” என்றார்.

மேலும் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவது தொடர்பாக வெளியான தகவல்கள் குறித்து கேட்டபோது, “அதற்கு எதுவும் காரணம் இருக்கிறதா?. ஜனாதிபதி ஆட்சி என்ன வேடிக்கையான ஒன்றா?. பெரும்பான்மையுடன் மகாவிகாஸ் அகாடி கூட்டணி மராட்டியத்தை ஆட்சி செய்து வருகிறது” என்றார்.

Next Story