சிவகாசி பால்காரர் கொலை வழக்கில் 8 பேர் கைது
சிவகாசியில் பால்காரர் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சிவகாசி,
சிவகாசி சரஸ்வதிபாளையத்தை சேர்ந்தவர் பால்காரர் முனியசாமி (வயது 53). நேற்று முன்தினம் அதிகாலை 4.15 மணிக்கு முனியசாமி தன்னுடைய வீட்டில் இருந்து பால் வாங்குவதற்கான வாகனத்தில் வெளியே வந்தார்.
வீட்டில் இருந்து மெயின்ரோட்டுக்கு வருவதற்குள் மறைந்து இருந்த சிலர் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பன்றி திருட்டு தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டு இந்த கொலை சம்பவம் நடந்து இருப்பதாக தெரியவந்தது. இதை தொடர்ந்து குற்றவாளிகளை தேடி பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அவர்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேடினர். இதில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக மாரனேரி அருகில் உள்ள ஏ.துலுக்கப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (35), பாண்டி என்கிற கட்டப்பாண்டி (44), விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (26), கலையரசன் (24), கார்த்திகேயன் (23), தங்கவேலு (27), நடுவூரை சேர்ந்த மாரீஸ்வரன் (26), காமராஜர் காலனியை சேர்ந்த காளிராஜ் (27) ஆகிய 8 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story