மக்களின் நம்பிக்கையை பெறுபவர்கள்தான் முதல்-அமைச்சர் ஆக முடியும் - அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து


மக்களின் நம்பிக்கையை பெறுபவர்கள்தான் முதல்-அமைச்சர் ஆக முடியும் - அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து
x
தினத்தந்தி 22 Sep 2020 10:15 PM GMT (Updated: 23 Sep 2020 12:18 AM GMT)

மக்களின் நம்பிக்கையை பெறுபவர்கள் தான் முதல்-அமைச்சராக முடியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை, 

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.2.45 கோடி செலவில் ஜான்சிராணி பூங்கா பகுதியில் கட்டப்பட்டு வரும் புராதன சின்னங்கள் மற்றும் விற்பனை அங்காடியை மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமையில் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக மதுரைக்கு அதிக அளவில் வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் சுமார் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள ஜான்சிராணி பூங்கா ரூ.2.45 கோடி செலவில் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த அங்காடியில் தரைத்தளத்தில் 10 விற்பனை கடைகள் மற்றும் முதல் தளத்தில் உணவகம் அமைக்கப்பட்டு வருகிறது.

நவீன வசதிகளுடன் கூடிய புராதன சின்னம், விற்பனை அங்காடியின் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அங்காடியின் முன்புறம் பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள் மற்றும் அலங்கார புல்வெளிகள் அமைக்கவும் இதர அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும் மதிப்பீட்டில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்திலிருந்து வருவதற்கு பேட்டரி கார்கள் இங்கிருந்து இயக்கப்பட உள்ளது. மேலும் பயணிகளின் வசதிக்காக குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட உள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்கப்படும். வைகை ஆற்றின் வடக்குப்பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் மட்டும் வருகிற 2022-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். கூட்டுறவுத் துறை மிக சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எந்தவித முறைகேடுகளும் நடைபெற வில்லை. மக்களின் நம்பிக்கையை பெறுபவர்கள் தான் தமிழ்நாடு முதல்-அமைச்சராக முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story