கோவையில் சராசரியை தாண்டி பெய்த பருவமழை: குறிச்சி, பேரூர் பெரிய குளம் நிரம்பியது - நொய்யல் ஆற்றில் அமைச்சர் ஆய்வு
கோவையில் தென்மேற்கு பருவமழை சராசரி அளவை தாண்டி பெய்துள்ளது. இதனால் பேரூர் பெரியகுளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பின. நொய்யல் ஆற்றில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு மேற்கொண்டார்.
கோவை,
கோவை மாவட்டத்தில் வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கால தாமதமாக தொடங்கியது. இதனால் மழை குறைவாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சராசரி அளவான 188 மில்லிமீட்டர் அளவை தாண்டி மழை பெய்து உள்ளது. இந்த மழையால் கோவையில் உள்ள குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. உக்குளம், செங்குளம் பேரூர் பெரிய குளம் குறிச்சி குளம் உள்ளிட்ட குளங்கள் முழுவதும் நிறைந்து உள்ளன.
தற்போது நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 450 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்த தண்ணீர் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. கோவை உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் ஆகிய குளங்கள் 85 சதவீதம் அளவிற்கும், வெள்ளலூர் பெரியகுளம் 80 சதவீதம் அளவிற்கும் நிரம்பியுள்ளன. இன்னும் சில நாட்களில் இந்த குளங்கள் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.
பருவமழை குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ராமநாதன் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 188 மில்லி மீட்டர் அளவிற்கு பெய்யும். ஆனால் இந்த ஆண்டு சராசரி அளவை தாண்டி 269 மி.மீ. அளவிற்கு பெய்துள்ளது. இதில் ஜூன் மாதத்தில் 22.5 மி.மீ. மழையும், ஜூலை மாதத்தில் 83.5 மி.மீ. மழையும், ஆகஸ்ட் மாதத்தில் 49.5 மி.மீ. மழையும், இந்த மாதத்தில் தற்போது வரை 113.5 மி.மீ. மழையும் பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை முடிய இன்னும் சில நாட்கள் உள்ளதால் கூடுதலாக 40 மி.மீ. வரை மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த மழையால் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியை தொடங்கலாம். மேலும் மக்காச்சோளம் ராபி பருவ விதைப்பு பணியை மேற்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து சித்திரைச்சாவடி தடுப்பணை, குனியமுத்தூர் தடுப்பணை சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை, புட்டுவிக்கி தடுப்பணை உள்ளிட்ட தடுப்பணைகளில் மழை வெள்ளம் சீறிப்பாய்ந்தது. மேலும் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று கோவை மாதம்பட்டி அருகே நொய்யல் ஆற்றில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர், இந்த வெள்ள நீரை கொண்டு நொய்யல் ஆறு வழித்தடத்தில் உள்ள அனைத்து குளங்கள், குட்டைகள், ஏரிகளை நிரப்ப வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அனைத்து நீர்நிலைகளும் பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story