பிவண்டி கட்டிட விபத்தில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு - பலி 25 ஆக உயர்வு
பிவண்டி கட்டிட விபத்தில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதால் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்து உள்ளது.
மும்பை,
பிவண்டி கட்டிட விபத்தில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதால் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்து உள்ளது.
மும்பையை அடுத்த தானே மாவட்டம் பிவண்டியில் தமன்கர் நாக்கா அருகே நார்போலி பட்டேல் காம்பவுண்ட்டில் உள்ள ‘ஜிலானி’ என்ற 3 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஒருபகுதி நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணியளவில் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். விபத்தில் இருந்து தப்பித்த எஞ்சிய கட்டிடமும் அபாய நிலையில் இருந்ததால் மீட்பு குழுவினர் அதிக அதிர்வுகளை ஏற்படுத்தும் எந்திரங்களை பயன்படுத்தாமல், மோப்ப நாய் மற்றும் சிறிய ரக எந்திரங்கள் உதவியுடனே மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் நேற்று முன்தினம் இரவு வரை 7 சிறுவர், சிறுமிகள் உள்பட 13 பேரை பிணமாக மீட்டு இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக மீட்பு பணி நடைபெற்றது. அப்போது மேலும் சிலரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதற்கிடையே நேற்று காலை பேரிடர் மீட்பு படையினர் ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தோண்ட தோண்ட பிணமாகவும், உயிருடனும் பலர் மீட்கப்பட்டனர். இதில் உயிருடன் மீட்கப்பட்டவர்கள் பிவண்டியில் உள்ள இந்திரா காந்தி நினைவு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இரவு வரை கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்து உள்ளது.
இதேபோல இதுவரை 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
கட்டிட விபத்தில் இதுவரை 25 பேர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் மராட்டியத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
2 கட்டிடத்தில் வசித்தவர்கள் வெளியேற்றம்
பிவண்டியில் 3 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்ததை அடுத்து, அந்த பகுதியில் இருந்த மேலும் 2 கட்டிடங்களும் ஆபத்தானவை என தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 கட்டிடங்களில் வசித்து வந்த 13 குடும்பத்தினரை மாநகராட்சியினர் வெளியேற்றினர். முன்னதாக அந்த கட்டிடங்களுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த இரு கட்டிடங்களை இடிப்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என மாநகராட்சி வார்டு சூப்பிரண்டு லட்சுமண் கோக்னி தெரிவித்தார்.
Related Tags :
Next Story