நடிகை தீபிகா படுகோனே போதைப்பொருள் வழக்கில் சிக்குவாரா? - போலீசார் சம்மன் அனுப்ப முடிவு
நடிகை தீபிகா படுகோனேக்கு தேவைப்பட்டால் சம்மன் அனுப்பப்படும் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.
மும்பை,
பிரபல இந்தி இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது, போதைப்பொருள் கும்பலுடன் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. நடிகை ரியா போதைப்பொருள் பயன்படுத்தியதுடன், சுஷாந்த் சிங்கிற்காகவும் போதைப்பொருள் வாங்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து நடிகை ரியா, அவரது தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர், வேலைக்காரர் மற்றும் போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் என 12-க்கும் மேற்பட்டவர்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர். கைதான ரியா உள்ளிட்டவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பிரபல தமிழ் நடிகை ரகுல்பிரீத் சிங், இந்தி நடிகை சாராஅலிகான், பேஷன் டிசைனர் சிமான் கம்பாட்டா ஆகியோருக்கு இந்த வாரம் சம்மன் அனுப்பப்படும் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் சுஷாந்த் சிங்கின் திறன் மேலாளர் ஜெயா ஷாவிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போதைப்பொருள் பயன்படுத்தும் மேலும் சில சினிமா பிரபலங்கள் குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேயின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் மற்றும் திறன் மேலாண்மை நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி துருவ் சிட்கோபேகருக்கும் சம்மன் அனுப்பி உள்ளனர். இதனால் போதைப்பொருள் வழக்கில் நடிகை தீபிகா படுகோனேயும் சிக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாங்கள் முதலில் கரிஷ்மா பிரகாசிடம் விசாரணை நடத்துவோம். அதன்பிறகு தேவைப்பட்டால் நடிகை தீபிகா படுகோனேக்கு சம்மன் அனுப்பப்படும்” என்றார்.
நடிகைகள் சாராஅலிகான், ரகுல்பிரீத் சிங்கை அடுத்து பிரபல நடிகை தீபிகா படுகோனேக்கும் போதைப்பொருள் வழக்கில் சம்மன் அனுப்பப்படலாம் என்ற தகவல் வெளியாகி இருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அடுத்தடுத்த நாட்களில் இன்னும் சிலரின் பெயர்கள் வெளிவரலாம் என கருதப்படுவதால், திரையுலகம் கலக்கம் அடைந்துள்ளது.
தீபிகா படுகோனே தமிழில் சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தில் நடித்து உள்ளார்.
Related Tags :
Next Story