மத்திய அரசின் சட்ட திருத்த மசோதாக்களால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் - மந்திரி பி.சி.பட்டீல் பேட்டி
மத்திய அரசின் சட்ட திருத்த மசோதாக்களால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் எனேஉ மந்திரி பி.சி.பட்டீல் கூறியுள்ளார்.
பெங்களூரு,
விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வேளாண்மை சந்தைகள் திருத்த சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்துகொள்ள முடியும். விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் நேரடியாக விளைபொருட்களை கொள்முதல் செய்து கொள்ளலாம். விளைபொருட்களை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. விவசாய விளைபொருட்கள் சேவை ஒப்பந்த மசோதா மூலம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும். இந்த சட்ட திருத்த மசோதாக்கள் விவசாயத்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று மத்திய விவசாயத்துறை மந்திரி கூறியுள்ளார். மேலும் அரசின் ஆதரவு விலை வழங்கும் நடைமுறை வழக்கம்போல் தொடரும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். நாட்டில் உள்ள விவசாயிகளில் 86 சதவீதம் பேர் சிறு விவசாயிகள்.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாய விளைபொருட்களை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு இந்த சட்ட திருத்த மசோதாக்கள் உதவியாக இருக்கும். விவசாயத்துறைக்கு அதிகளவில் முதலீடுகள் வரும். இதன் மூலம் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். மத்திய அரசு இந்த மூன்று மசோதாக்களுக்கு கடந்த ஜூன் மாதமே அவசர சட்டம் பிறப்பித்தது. இப்போது மத்திய அரசு அதை நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றுள்ளது. இதுகுறித்த விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு ஜனநாயகத்திற்கு எதிராக நடந்து கொண்டுள்ளனர். இதை பா.ஜனதா வன்மையாக கண்டிக்கிறது. சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த விளைபொருட்களை நாட்டின் எந்த பகுதியிலும் விற்பனை செய்துகொள்ள முடியும்.
விளைபொருட்களை கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்கள், விவசாய உபகரணங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்குவது, விளைபொருட்கள் நாசம் அடையும்போது, அதில் 50 சதவீதத்தை முதலீட்டாளர்கள் ஏற்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இவ்வாறு பி.சி.பட்டீல் கூறினார்.
Related Tags :
Next Story