அகரத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள்: உறை கிணற்றில் மேலும் 4 அடுக்குகள் கண்டுபிடிப்பு
கீழடி அகழ்வாராய்ச்சியின்போது அகரம் பகுதியில் உறை கிணற்றில் கூடுதலாக 4 அடுக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்புவனம்,
திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கீழடியில் பெரிய, சிறிய பானைகள், செங்கல் கட்டிட சுவர்கள், விலங்கின எலும்பு கூடுகள், நெருப்பு பயன்பாட்டின் கட்டமைப்பு உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. அகரத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் கடந்த மாதம் 7-ந்தேதி 6 அடுக்கு கொண்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த உறைகிணற்றின் ஒரு அடுக்கு முக்கால் அடி உயரமும், 2 அரை அடி அகலமும் கொண்டதாக இருந்தது. மேலும் தண்ணீரை எவ்வாறு சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் சிந்தித்து இந்த உறைகிணறுகளை அமைத்து தண்ணீரை சேமித்து வைத்துள்ளனர் என்பது தெரியவந்தது. இந்தநிலையில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்றபோது மேலும் 5 அடுக்குகள் கூடுதலாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 11 அடுக்குகள் கொண்ட உறைகிணறாக ஏற்கனவே காட்சியளித்தது. தொடர்ந்து தற்போது மேலும் ஆழமாக தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி நடைபெற்றபோது அங்கு கூடுதலாக 2 அடுக்கு வெளியே தெரிந்தது. இந்த அடுக்குகளுடன் சேர்த்து மொத்தம் 13 அடுக்கு கொண்ட உறைகிணறாக காட்சியளித்தது. இதுதவிர நேற்று வரை கூடுதலாக குழிகள் தோண்டி ஆராய்ச்சி செய்தபோது மேலும் கூடுதலாக 4 அடுக்குகள் கொண்ட உறை இருப்பது தெரிய வந்த பின்னர் இதுவரை மொத்தம் 17 அடுக்குகள் கொண்ட உறைகிணறாக காட்சியளிக்கிறது.
இந்த பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை முடிக்க வருகிற 30-ந்தேதி வரை தான் அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்குள் இந்த பணிகள் முழுவதும் நிறைவு பெறுமா அல்லது அனுமதி காலம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்த விவரங்கள் இன்னும் சில தினங்களில் தெரிய வரும். அதே நேரத்தில் கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய பகுதியில் எடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணியும் தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது.
Related Tags :
Next Story