பெங்களூரு மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு - சட்டசபையில் மசோதா கூட்டு பரிசீலனை குழு அறிக்கை தாக்கல்


பெங்களூரு மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு - சட்டசபையில் மசோதா கூட்டு பரிசீலனை குழு அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 23 Sept 2020 5:46 AM IST (Updated: 23 Sept 2020 5:46 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கையை 250 ஆக உயர்த்தப்படும் என்று சட்டசபையில் மசோதா கூட்டு பரிசீலனை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பெங்களூரு, 

பெங்களூரு மாநகராட்சியில் தற்போது 198 வார்டுகள் உள்ளன. இவற்றில் சில வார்டுகளில் மக்கள்தொகை அதிகமாக உள்ளது. இன்னும் சில வார்டுகளில் மக்கள்தொகை குறைவாக உள்ளன. ஆனால் நிதி ஒதுக்கீடு மட்டும் சரிசமமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்தும் பொருட்டும், பெங்களூருவுக்கு தனி சட்டத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலும், கர்நாடக அரசு கடந்த மார்ச் மாதம் பெங்களூரு மாநகராட்சி சட்ட மசோதாவை தாக்கல் செய்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த மசோதாவை சட்டசபையின் கூட்டு பரிசீலனை குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து பா.ஜனதாவை சேர்ந்த எஸ்.ரகு எம்.எல்.ஏ. தலைமையில் மசோதா கூட்டு பரிசீலனை குழு அமைக்கப்பட்டது. அதில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர். அந்த குழு, அரசின் திருத்த மசோதா குறித்தும், மாநகராட்சி வார்டுகளை உயர்த்துவது குறித்தும் பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தியது. மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கையை 225 ஆக உயர்த்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக சட்டத்துறை மந்திரி மாதுசாமி தெரிவித்திருந்தார்.

வார்டுகளின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை நேற்று காலை கூடியதும், மாநில அரசு பல்வேறு திருத்த மசோதாக்களை தாக்கல் செய்தது. அதே போல் சட்டசபை கூட்டு பரிசீலனை குழு தலைவர் ரகு, பெங்களூரு மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், எனது தலைமையிலான பரிசீலனை குழுவின் காலஅவகாசத்தை நீட்டிக்குமாறு சபாநாயகரிடம் கேட்டோம். அதன்படி சபாநாயகர், குழுவின் காலஅவகாசத்தை வருகிற நவம்பர் மாதம் 10-ந் தேதி வரை நீட்டித்துள்ளார்.

இந்த அறிக்கையை தாக்கல் செய்த பிறகு எஸ்.ரகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக அரசின் நகராட்சிகள் சட்ட திருத்த மசோதாவை நாங்கள் ஆராய்ந்தோம். பெங்களூரு மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கையை 250 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே பெங்களூரு மாநகராட்சியின் பரப்பளவு அதிகமாக உள்ளது. புதிதாக எந்த பகுதியையும் சேர்க்காமல் தற்போது உள்ள மாநகராட்சி எல்லைக்குள்ளேயே, வார்டுகளை மறுவரையறை செய்து அதன் எண்ணிக்கையை உயர்த்த பரிந்துரை செய்துள்ளோம். இதன் மூலம் புதிதாக 52 வார்டுகள் சேர்க்கப்படுகின்றன. இந்த அறிக்கைக்கு சட்டசபை ஒப்புதல் வழங்க வேண்டும். அதன் பிறகு மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 250 ஆக உயரும்.

2 மேயர்கள்

மாநகராட்சி தேர்தலை ஒத்திவைக்கும் திட்டம் இல்லை. மேயரின் பதவி காலத்தை 30 மாதங்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். 5 ஆண்டுகளில் 2 மேயர்கள் பணியாற்றவார்கள். நிலைக்குழுக்களின் எண்ணிக்கையை 12-ல் இருந்து 8 ஆக குறைக்க முடிவு செய்துள்ளோம். தற்போது உள்ள மாநகராட்சி மன்ற அரங்கத்தை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளோம். தற்போது உள்ள மண்டலங்களின் எண்ணிக்கையை 8-ல் இருந்து 15 ஆக உயர்த்துவோம். ஒவ்வொரு மண்டலத்திற்கு இணை கமிஷனரை நியமித்து அவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும். இந்த வார்டு மறுவரையறை பணிகள் இன்னும் 15 நாட்களில் நிறைவடையும். அதன் பிறகு மாநகராட்சி தேர்தல் டிசம்பர் மாதத்திற்குள் நடைபெறும்.

மக்கள்தொகை

நகரின் எல்லை பகுதியில் அமைந்துள்ள வார்டுகளில் மக்கள்தொகை 70 ஆயிரம் வரை உள்ளது. மையப்பகுதி வார்டுகளில் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரமாக மக்கள்தொகை உள்ளது. அதனால் இதை சரிசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்துகிறோம்.

இவ்வாறு எஸ்.ரகு கூறினார்.

Next Story