திருப்பூரில் விசாரணைக்கு அழைத்து சென்ற தொழிலாளி மர்ம சாவு - போலீசார் தாக்கியதால் இறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம்


திருப்பூரில் விசாரணைக்கு அழைத்து சென்ற தொழிலாளி மர்ம சாவு - போலீசார் தாக்கியதால் இறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 23 Sep 2020 12:40 AM GMT (Updated: 23 Sep 2020 12:40 AM GMT)

திருப்பூரில் போலீஸ் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால்தான் இறந்து விட்டதாக கூறி, உறவினர்கள் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நல்லூர்,

திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது28). கட்டிட தொழிலாளி. இவரது வீட்டின் அருகே சரண்யா (26) என்பவர் குடியிருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி உடல் வெந்த நிலையில், சரண்யா திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் ஊரக போலீசார் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி சென்று சரண்யாவிடம் விசாரணை செய்தனர். அப்போது மணிகண்டன், அவருடைய வீட்டின் அருகே வசித்து வரும் கலா, ஜோதி ஆகியோர் சேர்ந்து வெந்நீரை ஊற்றி விட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 16-ந் தேதி சரண்யா இறந்து விட்டார்.

இதையடுத்து மணிகண்டனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை மணிகண்டன் வீட்டிற்கு சென்ற போலீசார், அவரை விசாரணைக்காக ஊரக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு விசாரணை நடத்திய போது, அவருக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகக்கூறி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு மணிகண்டனை கொண்டு சென்றனர். அங்கு மணிகண்டனை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மணிகண்டனின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனை முன்பாக திரண்டனர். மேலும், விசாரணைக்கு அழைத்து சென்ற மணிகண்டனை போலீசார் தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக கூறி அவருடைய உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு தெற்கு உதவி போலீஸ் கமிஷனர் நவீன்குமார், வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் ஆகாத உறவினர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். அப்போது மருத்துவமனைக்கு வந்த கலெக்டரின் காரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முற்றுகையிட்டனர். காரை விட்டு இறங்கிய கலெக்டர் மருத்துவமனை டீன் அறைக்கு சென்று நால்வரை மட்டும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

உரிய நடவடிக்கை

பின்னர் உறவினர்கள் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், “மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமாதானம் அடைந்து மணிகண்டன் உடலை வாங்கி சென்றனர். இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரி பகுதியில் காலை முதல் மதியம் வரை பரபரப்பாக காணப்பட்டது.

Next Story