மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்


மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 23 Sept 2020 8:24 AM IST (Updated: 23 Sept 2020 8:24 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

மாமல்லபுரம்,

தர்மபுரி மாவட்டம் தர்மபுரி நகரம், அக்ரகாரம் தெருவை சேர்ந்தவர் மாதையன். இவரது மகன் அரவிந்தசாமி (வயது 25), இவரது பக்கத்து தெருவை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரது மகள் ஹர்ஷாலட்சுமி (19). இவர் 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தர்மபுரியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இதில் ஹர்ஷாலட்சுமி வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 14-ந் தேதி தர்மபுரியில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட தகவல் ஹர்ஷாலட்சுமி வீட்டுக்கு தெரியவே அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

போலீசில் தஞ்சம்

பின்னர் காதல் ஜோடிக்கு தர்மபுரியில் உள்ள ஹர்ஷாலட்சுமி உறவினர்கள் மூலம் கொலை மிரட்டல் வரவே காதல் ஜோடியினர் அங்கிருந்து பஸ் மூலம் வந்து திருப்போரூர் அருகே உள்ள ரத்தினமங்கலத்தில் உள்ள அரவிந்தசாமியின் உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தனர்.

தர்மபுரியில் உள்ள அதியான்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஹர்ஷாலட்சுமி பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அங்கிருந்து போலீசார் நேற்று ரத்தினமங்கலம் கிராமத்திற்கு வந்து அங்கு அரவிந்தசாமியின் உறவினர் வீட்டில் தங்கியிருந்த காதல் ஜோடியினரை தர்மபுரிக்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதையடுத்து காதல் ஜோடியினர் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் தர்மபுரிக்கு வர முடியாது என கூறினர். பிறகு காதல் ஜோடியினர் அதியமான்கோட்டை போலீசாருடன் செல்ல மறுத்து நேற்று மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தங்களுக்கு தொடர்ந்து கூலிப்படை மூலம் மிரட்டல் வருவதாகவும், தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டும் தஞ்சம் அடைந்து புகார் அளித்தனர்.

அந்த புகார் மனுவில் நாங்கள் இருவரும் போலீஸ் விசாரணைக்கு தர்மபுரிக்கு சென்றால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனவும், இருவரும் விரும்பியே திருமணம் செய்து கொண்டதாகவும், நாங்கள் மேஜர் என்பதால் தங்களை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி எங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் கூறியுள்ளனர். இது குறித்து மாமல்லபுரம் அனைத்து மகளர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அமுதா விசாரித்து வருகிறார்.

Next Story