திருச்சியில் சாலையோரம் சுற்றித்திரிந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேர் கைது


திருச்சியில் சாலையோரம் சுற்றித்திரிந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Sep 2020 10:15 AM GMT (Updated: 23 Sep 2020 9:56 AM GMT)

திருச்சியில் சாலையோரம் சுற்றித்திரிந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

திருச்சி, 

திருச்சி அருகே உள்ள மாத்தூரை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக சுற்றித்திரிந்து வந்தார். சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காட்சியளித்த அந்த பெண் அழகானவர். இது பலரது கண்ணை உறுத்தியது. அந்தப் பகுதியில் இலவசமாக யார் உணவு வழங்கினாலும் அதனை சாப்பிட்டுவிட்டு அங்கேயே ஏதாவது ஒரு ஓரத்தில் இரவு நேரத்தில் தூங்கி வந்தார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை அங்குள்ள ஒரு ஓட்டல் முன் அந்தப் பெண் அரை நிர்வாண கோலத்தில் ரத்த காயங்களுடன் கிடந்தார். இதனை பார்த்த கார்த்திக் என்ற நபர் உடனடியாக அவரது ஆடைகளை சரிசெய்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இதுபற்றி உடனடியாக அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். இதில் அந்தப் பெண்ணை சிலர் ஆட்டோவில் கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாகவே அவர் ரத்தப்போக்கு ஏற்பட்டு மயங்கி கிடந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

ஆதரவற்ற நிலையில் சாலையோரம் சுற்றித் திரிந்த பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு இருந்தாலும் அதற்கான ஆதாரங்கள் போலீசாருக்கு சரியாக கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் துரித நடவடிக்கை எடுக்க கோரியும், கூட்டு பலாத்காரம் செய்த நபர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும் திருச்சி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு உறுப்பினர் வக்கீல் ஜெயந்திராணி முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மின்னஞ்சல் மூலம் புகார் செய்தார்.

அந்த புகார் மனு உடனடியாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின் பேரில் அரசு மருத்துவமனை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் இளம் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த நபர்கள் யார் என்பதை கண்டு பிடிப்பதில் போலீசார் தீவிரமாக இறங்கினார்கள். இதில் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டனர்.

ஸ்ரீரங்கம் சரக உதவி போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தி மேற்பார்வையில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா இதுதொடர்பாக ஒரு வழக்குப்பதிவு செய்து நேற்று 2 பேரை கைது செய்தார். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரது பெயர் முஸ்தபா (வயது 41). திருச்சி கீழ வண்ணாரப்பேட்டையை சேர்ந்த இவர் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பழைய குற்றவாளி ஆவார். இன்னொருவர் சிவா (23) இவர் விழுப்புரம் மாவட்டம் வாய்க்கால்மேடு என்ற பகுதியை சேர்ந்தவர். திருச்சியில் தங்கி இருந்து ஒரு கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்த இரண்டு பேர் மீதும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 376 (டி) போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இன்னும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு திருச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story