நவராத்திரி விழா அடுத்த மாதம் 17-ந் தேதி தொடக்கம்: கொலு பொம்மைகள் விற்பனைக்காக கடைகளுக்கு வந்தன


நவராத்திரி விழா அடுத்த மாதம் 17-ந் தேதி தொடக்கம்: கொலு பொம்மைகள் விற்பனைக்காக கடைகளுக்கு வந்தன
x
தினத்தந்தி 23 Sep 2020 11:00 AM GMT (Updated: 23 Sep 2020 10:46 AM GMT)

நவராத்திரி விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி கொலு பொம்மைகள் விற்பனைக்காக கடைகளுக்கு வந்தன.

புதுக்கோட்டை,

நவராத்திரி விழா என்பது மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி 9 நாட்கள் போரிட்டு 10-வது நாளில் அவனை வதம் செய்து வெற்றிகொண்டதாக நம்பப்படுகிறது. இதனை நினைவுகூறும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

நல்ல எண்ணங்கள், திறமைகளை ஒன்றிணைத்து, கெட்ட எண்ணங்களை அழிப்பது தான் நவராத்திரி விழாவின் முக்கியத்துவமாக ஆன்மிக வரலாறுகள் கூறுகின்றன. இந்த ஆண்டு நவராத்திரி விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி முடிவடைகிறது. அடுத்த மாதம் 25-ந் தேதி சரஸ்வதி பூஜையாகும். 26-ந் தேதி விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இந்த நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வாக கொலு வைப்பது வழக்கம். அவர்களுக்கு எப்படி கொலு வைக்க வேண்டும். எந்த வரிசையில் கொலு பொம்மைகள் வைக்க வேண்டும் என்பது தெரியும். புதிதாக தங்களின் வீட்டில் கொலு பொம்மை வைக்க விரும்புபவர்களுக்கு அதை எப்படி முறையாக வைக்க வேண்டும் என்பது தெரிந்து அதன் படி வைப்பது அவசியம். 3 படிகள், 5 படிகள், 7 படிகள், 9 படிகள் என 11 படிகள் வரை வைக்கலாம்.

படிப்படியாக மனிதனின் வாழ்க்கை உயர்ந்தது என்றும், உலகில் உயிரினங்கள் எப்படி படிப்படியாக தோன்றியது. என்றும், மற்றொரு விளக்கமாக மனிதன் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த கொலு படிகள் அமைகின்றன.

நவராத்திரி கொலுவில் தெய்வீகத்தை உணர்த்தும் சாமி பொம்மைகள், இயற்கை காட்சி பொம்மைகள், விலங்கின பொம்மைகள் உள்ளிட்டவை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதேபோல கோவில்களிலும் நவராத்திரி விழா நடைபெறும். இந்த நிலையில் நவராத்திரி விழா அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் கொலு பொம்மைகள் விற்பனைக்காக புதுக்கோட்டையில் கடைகளுக்கு வரத்தொடங்கின. மதுரையில் இருந்து மொத்தமாக பொம்மைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் சாந்தசாமி கோவில் அருகே உள்ள பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் கொலு பொம்மை விற்பனைக்காக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் கொலு பொம்மைகள் ஆர்டர் செய்திருப்பதாகவும், அவை வர உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டு நவராத்திரி விழாவினை கொண்டாட இந்துக்கள் தயாராகும் நிலையில் அதற்கேற்ப கொலு பொம்மைகள் முன்கூட்டியே விற்பனைக்கு வரத்தொடங்கி உள்ளன. சிறிய அளவு முதல் பெரிய அளவிலான கொலு பொம்மைகள் இடம்பெற்றுள்ளன.

Next Story