நாகையில், ஆதரவற்றவர்களின் உடலுக்கு இறுதி சடங்கு செய்த பெண் போலீஸ் - மனித நேயமிக்க செயலுக்கு பாராட்டு குவிகிறது
நாகையில் ஆதரவற்ற இருவரின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்து அடக்கம் செய்த பெண் போலீஸ் ஏட்டுவின் மனிதநேயத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
வாய்மேடு,
நாகை மாவட்டம் வாய்மேடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெவ்வேறு இடங்களில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், 80 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் பிணமாக கிடந்தனர். இருவருடைய உடல்களையும் போலீசார் கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுடைய உடலை பெற்றுக்கொள்வதற்கு ஆட்கள் யாரும் வரவில்லை. இதையடுத்து 2 பேரின் உடல்களையும் அடக்கம் செய்ய மருத்துவமனை முடிவு செய்தது.
இந்த நிலையில் வாய்மேடு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் சாவித்ரி என்பவர் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் உடல்களை எடுத்துச்சென்று நாகையில் உள்ள ஒரு மயானத்தில் அடக்கம் செய்தார். முன்னதாக அவர், இறந்தவர்களின் உறவினர்களை போன்று இருவரின் உடல்களின் மேல் மஞ்சள் தெளித்து, வாய்க்கரிசி போட்டு இறுதி சடங்குகளையும் செய்தார். ஆதரவற்ற இருவரின் உடல்களுக்கு இறுதி சடங்கு செய்த பெண் போலீஸ் ஏட்டின் மனித நேயத்துக்கு பொதுமக்கள் மற்றும் சக போலீசார் தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Related Tags :
Next Story