விழுப்புரத்தில், வக்கீலிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி அதிகாரி கைது - இடைத்தரகரும் சிக்கினார்
விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் வக்கீலிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கள்ளக்குறிச்சியை சேர்ந்த அதிகாரி மற்றும் இடைத்தரகர் ஒருவரும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். வக்கீல். இவர் விழுப்புரம் நகர பகுதியான சாலாமேட்டில் புதிய வீட்டு மனை ஒன்றை வாங்கியுள்ளார். அந்த மனையில் வீடு கட்டுவதற்காக கட்டிட வரைபட அனுமதி கேட்டு நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இருப்பினும் அவருக்கு உடனடியாக அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து நகராட்சி அலுவலகத்தில், நகர அமைப்பு அலுவலராக இருக்கும் ஜெயவேலை(வயது 50) அணுகினார். அப்போது அவர், கட்டிட வரைபட அனுமதி உடனடியாக கொடுக்க வேண்டும் என்றால் ரூ.8 ஆயிரம் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கு தனியார் கட்டுமான பொறியாளர் மோகன கிருஷ்ணன்(38) என்பவர் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜசேகர், இது பற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு யுவராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், ஏட்டுகள் விஜயதாஸ், பாலமுருகன், நரசிம்மராவ் ஆகியோர் நேற்று காலை நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு ராஜசேகரிடம் ரசாயனம் பூசப்பட்ட ரூபாய் நோட்டுகளை (ரூ.8 ஆயிரம்) கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை, ராஜசேகர் ஜெயவேலிடம் வழங்கினார். பணத்தை அவர் பெற்றுக்கொண்ட போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை சுற்றி வளைத்து கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். மேலும் இடைத்தரகர் மோகனகிருஷ்ணனையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
நகர அமைப்பு அலுவலர் ஜெயவேலின் சொந்த ஊர் கள்ளக்குறிச்சி ஆகும். இவர் 14 ஆண்டுகளாக விழுப்புரத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசின் கடிவாளத்தில் சிக்கி இருக்கிறார். இதற்கிடையே விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி நடவடிக்கை பற்றி அறிந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்து அவசர அவசரமாக அலுவலகத்தை விட்டு வெளியேறி விட்டனர். இதனால் மதியத்துக்கு பின்னர் அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது.
Related Tags :
Next Story