வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு - தெற்கு மாவட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்


வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு - தெற்கு மாவட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 23 Sep 2020 10:30 PM GMT (Updated: 23 Sep 2020 6:55 PM GMT)

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி,

மத்திய அரசு கொண்டு வந்து உள்ள வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28-ந் தேதி (திங்கட்கிழமை) மாநிலம் முழுவதும் தி.மு.க கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

அதன்படி தூத்துக்குடி தி.மு.க. தெற்கு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோரம்பள்ளத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சண்முகையா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் சிறுவணிகர்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தியும், அதற்கு துணை போகும் மாநில அரசைக் கண்டித்தும், வருகிற 28-ந் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் 15 இடங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் பங்கேற்பவர்கள் முககவசம் அணிந்தும், தகுந்த அளவிலான சமூகஇடைவெளியை கடைபிடித்தும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன், ம.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முரசுதமிழப்பன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அசன், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், ஒன்றிய செயலாளர்கள் மாடசாமி, ஜெயக்கொடி, சுப்பிரமணியன், தொண்டர் அணி அமைப்பாளர் வீரபாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போன்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கலைஞர் அரங்கில் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வருகிற 28-ந் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதில் காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏ.பி.சி.வீ. சண்முகம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன், ம.தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் விநாயகாரமேஷ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைத்தலைவர் ரகுமான், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் அகமது இக்பால், தி.மு.க மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கயத்தாறு அருகே உள்ள அய்யனாரூத்து கிராமத்தில் தி.மு.க. புதிய உறுப்பினர்கள் அட்டை வழங்கும் விழா நடந்தது. கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில விவசாய தொழிலாளர்கள் அணி செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, 100 பேருக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். கயத்தாறு நகர செயலாளர் சுரேஷ்கண்ணன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story