தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தில் 21 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திறந்து வைத்தார்


தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தில் 21 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 24 Sept 2020 4:45 AM IST (Updated: 24 Sept 2020 12:40 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தில் 21 கண்காணிப்பு மேராக்களை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு விழா நேற்று காலை தென்பாகம் போலீஸ் நிலைய வளாகத்தில் நடந்தது.

தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமை தாங்கினார். தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்துகொண்டு, கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

தூத்துக்குடியில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் கண்காணிப்பு கேமரா கட்டாயமாகும். இன்னும் மூன்று ஆண்டுகளில் அனைத்து வீடுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது கட்டாயமாகி விடும். இதன் மூலம் 2 பயன்கள் உள்ளன. ஒன்று குற்றங்கள் நடக்காமல் தடுக்க முடியும். மற்றொன்று குற்றங்கள் நடந்தால் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

தற்போது நடைபெறும் குற்றங்களில் 95 சதவீதம் குற்றவாளிகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலமே கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பது அரிதான விஷயம். ஆனால் கண்காணிப்பு கேமரா 24 மணி நேரமும் கண்காணித்து கொண்டே இருக்கும்.

பெண்கள் பாதுகாப்புக்கு பல்வேறு சட்டங்கள் உள்ளன. இந்த சட்டங்கள் பற்றி பெண்களுக்கு விழிப்புணர்வு இருக்க வேண்டும். அதற்கு பெண்கள் படிக்க வேண்டும். படிப்பு தான் பெண்களுக்கு உபயோகமாக இருக்கும். இளம் வயதில் காதலிப்பது ஒரு ஈர்ப்பாக இருக்கும். ஆனால் அவ்வாறு நடக்கும் திருமணங்கள் பெரும்பாலும் சரியாக அமையாது.

தற்போது 40 சதவீத திருமணங்கள் விவாகரத்து மற்றும் கருத்து வேறுபாடு போன்றவற்றால் சிக்கி தவிக்கிறது. இது போகப் போக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆகையால் பெண்கள் நன்றாக படிக்க வேண்டும். படிக்க வாய்ப்பு இல்லாமல் பணிக்குச் சென்ற பெண்களும் தொலைதூர கல்வி மூலம் தங்கள் கல்வியைத் தொடர வேண்டும். கல்வி ஒன்றே அழியாத செல்வம். பெண்களுக்கு அதுவே தன்னம்பிக்கையை கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கே.டி.கே. நகர் பகுதியில் புறக்காவல் நிலையம் உள்ளது. இந்த புறக்காவல் நிலையத்தில் புதியதாக 5 கண்காணிப்பு கேமராக்கள் ஸ்ரீவைகுண்டம் போலீசாரால் அமைக்கப்பட்டு உள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட இந்த கண்காணிப்பு கேமராக்கள் தொடக்க விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்து கொண்டு, கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்து பார்வையிட்டார்.

நிகழ்ச்சியின் போது ஸ்ரீவைகுண்டம் துணை சூப்பிரண்டு வெங்கடேசன், தூத்துக்குடி மாவட்ட உதவி சூப்பிரண்டு (பயிற்சி) அபிஷேக் குப்தா, ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story