கொள்முதல் செய்யாததால் ஆத்திரம்: பாலை கீழே ஊற்றி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கொள்முதல் செய்யாததால் ஆத்திரம்: பாலை கீழே ஊற்றி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Sep 2020 10:15 PM GMT (Updated: 23 Sep 2020 9:55 PM GMT)

பால் கொள்முதல் செய்யாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஊர்வலமாக வந்து தர்மபுரியில் பாலை கீழே ஊற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பால் குளிரூட்டும் நிலையத்திற்கு அவர்கள் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி,

மொரப்பூர் ஒன்றியம் சின்னாங்கவுண்டப்பட்டி, பொம்பட்டியில் 150-க்கும் மேற்பட்ட பால் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் உள்ளனர். அவர்கள் உற்பத்தி செய்யும் பாலை அருகிலுள்ள கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஆவினுக்கு கொடுத்து வந்தனர். கடந்த 2 நாட்களாக விவசாயிகளிடமிருந்து பாலை கொள்முதல் செய்ய சங்க பணியாளர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் சங்க செயலாளர் மற்றும் பணியாளர்களிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தற்போது பால் உற்பத்தி அதிகளவில் இருப்பதால் கொள்முதல் செய்யப்படும் பால் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அனுப்ப முடியாத சூழ்நிலை உள்ளது. அளவுக்கு அதிகமாக வரும் பாலை இருப்பு வைக்க முடியாத நிலை இருப்பதால் பால் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று பணியாளர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக விவசாயிகள் ஆவின் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தபோது அதிகாரிகளும் இதே கருத்தை கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மொரப்பூர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பால்கேன்களுடன் ஊர்வலமாக தர்மபுரிக்கு வந்தனர். அவர்கள் தர்மபுரி 4 ரோட்டில் பாலை கீழே ஊற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது பால் கொள்முதல் செய்யாத ஆவின் நிர்வாகத்தை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதனையடுத்து விவசாயிகள் கிருஷ்ணகிரி சாலையில் உள்ள தர்மபுரி மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தையும், பால் குளிரூட்டும் நிலையத்தையும் பூட்டு போட்டு தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆவின் நிர்வாக அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பால் கொள்முதல் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story