கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய மந்திரி சுரேஷ் அங்கடி மரணம் - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது


கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய மந்திரி சுரேஷ் அங்கடி மரணம் - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
x

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்கடி நேற்று சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 65.

பெங்களூரு,

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தனது கோர தாண்டவத்தை நடத்தி வருகிறது. சாதாரண மக்கள் முதல் மக்கள் பிரதிநிதிகள் வரை யாரும் கொரோனாவுக்கு விதிவிலக்கல்ல. கர்நாடகத்திலும் மக்கள் பிரதிநிதிகள் கொரோனாவின் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். முதல்-மந்திரி எடியூரப்பா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, துணை முதல்-மந்திரிகள் அஸ்வத் நாராயண், கோவிந்த் கார்ஜோள், மந்திரிகள் சி.டி.ரவி, ஆனந்த்சிங், ஸ்ரீராமுலு, எஸ்.டி.சோமசேகர், பி.சி.பட்டீல், பைரதி பசவராஜ், பசவராஜ் பொம்மை, கோபாலய்யா, பைரதி பசவராஜ், ஈசுவரப்பா, சசிகலா ஜோலே ஆகியோரும், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்களும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.

அதுபோல் கர்நாடகத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களான சுமலதா, சங்கண்ணா கரடி, உமேஷ் ஜாதவ், பகவந்த் கூபா, ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரி சுரேஷ் அங்கடிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 11-ந் தேதி தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் எனவே தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களது தங்களது ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் தனது டுவிட்டர் பக்கத்தில் சுரேஷ் அங்கடி தெரிவித்து இருந்தார்.

கடந்த 12 நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய மந்திரி சுரேஷ் அங்கடி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு 8 மணி அளவில் மரணம் அடைந்தார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம் பெலகாவி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுரேஷ் அங்கடி பிரதமர் மோடியின் மத்திய மந்திரிசபையில் ரெயில்வே இணை மந்திரியாக பணியாற்றி வந்தார்.

சுரேஷ் அங்கடியின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளனர். மோடி தனது இரங்கல் செய்தியில் “சுரேஷ் அங்கடி ஒரு கடின உழைப்பாளி. கர்நாடகத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றி உள்ளார். அர்ப்பணிப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஆற்றல் மிக்க மந்திரியாகவும் பணியாற்றி வந்தார். அவரது மறைவு ஆழ்ந்த வருத்தத்தை கொடுத்து உள்ளது. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.”, என்று கூறி உள்ளார். மத்திய மந்திரிகள், கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, சித்தராமையா உள்ளிட்டோர் சுரேஷ் அங்கடியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர். கொரோனா தாக்கி இறந்த முதல் மத்திய மந்திரி சுரேஷ் அங்கடி ஆவார். கர்நாடகத்தில் கொரோனா தாக்கி இறந்த 2-வது மக்கள் பிரதிநிதி சுரேஷ் அங்கடி ஆவார். கடந்த வாரத்தில் கர்நாடகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அசோக் கஸ்தி ராய்ச்சூரில் கொரோனாவுக்கு மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த மத்திய மந்திரி சுரேஷ் அங்கடி பெலகாவி தாலுகா கே.கே.கொப்பா கிராமத்தில் 1-6-1955-ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை பெயர் சன்னபசப்பா. தாயார் பெயர் சோமவ்வா. பெலகாவியில் உள்ள எஸ்.எஸ்.எஸ். சமிதி கல்லூரியில் வணிகவியல் பட்டப்படிப்பை முடித்த சுரேஷ் அங்கடி பின்னர் பெலகாவியில் உள்ள சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பும் படித்தார்.

1996-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை பெலகாவி மாவட்ட பா.ஜனதா துணைத்தலைவராக பதவி வகித்த சுரேஷ் அங்க, 2001 முதல் 2004 வரை பெலகாவி மாவட்ட பா.ஜனதா தலைவராகவும் பதவி வகித்தார். சுரேஷ் அங்கடிக்கு கடந்த 1986-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவரது மனைவியின் பெயர் மங்கல் அங்கடி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு முதல்முறையாக பெலகாவி தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு சுரேஷ் அங்கடி தேர்வு செய்யப்பட்டார். அதன்பின்னர் 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு சுரேஷ் அங்கடி தேர்வு செய்யப்பட்டார்.

பெலகாவி-மும்பை பகுதிகளின் செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வந்த சுரேஷ் அங்கடியின் மறைவு, பெலகாவி மாவட்ட பா.ஜனதாவினரையும், கர்நாடக பா.ஜனதாவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Next Story