பிவண்டியில் கட்டிடம் இடிந்து தரைமட்டம் பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு - உயிரிழந்தவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்


பிவண்டியில் கட்டிடம் இடிந்து தரைமட்டம் பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு - உயிரிழந்தவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்
x
தினத்தந்தி 24 Sept 2020 4:35 AM IST (Updated: 24 Sept 2020 4:35 AM IST)
t-max-icont-min-icon

பிவண்டியில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் மேலும் 14 உடல்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 39 ஆக உயர்ந்து உள்ளது. உயிரிழந்தவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள் தெரியவந்தது.

தானே,

மும்பையை அடுத்த தானே மாவட்டம் பிவண்டியில் தமன்கர் நாக்கா அருகே நார்போலி பட்டேல் காம்பவுண்டில் உள்ள ஜிலானி என்ற 3 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரவு-பகலாக ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் வரை 2 நாட்களாக நடந்த மீட்பு பணியில் இடிபாடுகளில் இருந்து 25 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்று 3-வது நாளாக மீட்பு பணி நடந்தது. பலத்த மழை காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் யாரேனும் உயிருடன் சிக்கி இருக்கலாம் என்று கருதப்பட்டதால், மீட்பு பணி மிக கவனமாக நடந்தது. ஆனால் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள் தான் கிடைத்தன. இதில் பலரது உடல்கள் அழுகிய நிலையில் இருந்தது. அப்போது அங்கு கூடியிருந்த உறவினர்கள் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

நேற்றைய மீட்பு பணியின் போது 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்தது.

உயிரிழந்தவர்களில் 18 பேர் இரண்டு முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள். இவர்கள் அதிகாலை நேரம் என்பதால் ஆழ்ந்த தூக்கத்திலேயே உயிரை பறி கொடுத்துள்ளனர். இடிபாடுகளில் இன்னும் வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா என மோப்பநாய் மூலமும், நவீன கேமரா மூலமும் மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

மேலும் காயத்துடன் மீட்கப்பட்ட 25 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்துக்குள்ளான கட்டிடத்தில் வசித்தவர்கள் பெரும்பாலானோர் ஆட்டோ டிரைவர்கள், நடைபாதை வியாபாரிகள் மற்றும் ஏழை தொழிலாளிகள் ஆவர். கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருப்பதால் அங்கு வசித்தவர்களை காலி செய்யுமாறு கடந்த ஆண்டே நோட்டீஸ் கொடுத்ததாகவும், ஆனால் வாடகை குறைவு என்பதால் அவர்கள் வீடுகளை காலி செய்ய மறுத்து அங்கேயே வசித்து வந்ததாகவும் பிவண்டி- நிஜாம்பூர் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.

விபத்து குறித்து போலீசார் கட்டிட உரிமையாளர் சையத் அகமது ஜிலானி மீது வழக்கு பதிவு செய்து இருந்தனர். தலைமறைவான அவரை வலைவீசி தேடிவருகின்றனர். மேலும் 2 மாநகராட்சி அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story