திருச்செங்கோடு அருகே பயங்கரம்: தாயை கொன்று உடல் எரிப்பு - சொத்து தகராறில் கூலித்தொழிலாளி வெறிச்செயல்
திருச்செங்கோடு அருகே சொத்து தகராறில் தாயை கொலை செய்து உடலை எரித்த கூலித்தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
எலச்சிப்பாளையம்,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த தோக்கவாடி ஊராட்சி விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் பங்கஜம் (வயது 60). திருமண தரகர். இவர் தனது கணவர் தட்சிணாமூர்த்தியை பிரிந்து கடந்த 25 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். இவருக்கு பிரகாஷ் (39), சக்தி என்ற 2 மகன்கள் உள்ளனர். பிரகாஷ்க்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும் 5, 3, மற்றும் 1½ வயதில் 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். சக்தி திருமணமாகி தனிக்குடித்தனம் சென்று விட்டார்.
பிரகாஷ் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது தாய் பங்கஜம் மற்றும் குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். அந்த வீடு பங்கஜம் பெயரில் உள்ளது. இதனால் அந்த வீட்டை தனது பெயருக்கு மாற்றி தரக்கோரி பிரகாஷ் அடிக்கடி பங்கஜத்துடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அதற்கு பங்கஜம் மறுப்பு தெரிவித்ததுடன், எனக்கு பிறகு இந்த வீட்டை உன் குழந்தைகளுக்கு தான் எழுதி வைப்பேன் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டு மாடியில் உள்ள ஓலை கொட்டகையில் கயிற்று கட்டிலில் பங்கஜம் படுத்திருந்தார். அப்போது அங்கு சென்ற பிரகாஷ், வீட்டை தன் பெயருக்கு மாற்றி எழுதி வைக்கக்கோரி தகராறில் ஈடுபட்டார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ் அங்கிருந்த இரும்பு குழாயால் பங்கஜம் மண்டையில் ஓங்கி அடித்தார். இதில் மண்டை உடைந்து பங்கஜத்திற்கு ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பங்கஜத்தின் அலறல் சத்தம் கேட்டு முத்துலட்சுமி அங்கு ஓடி வந்தார். ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த தனது மாமியாரை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது பிரகாஷ் இது குறித்து யாரிடமாவது கூறினாலோ, போலீசுக்கு தகவல் தெரிவித்தாலோ உன்னையும் கொன்றுவிடுவேன் என முத்துலட்சுமியை மிரட்டினார்.
பின்னர் பிரகாஷ், தனது தாயின் உடலை வீட்டுக்கு எதிரே உள்ள காலியிடத்திற்கு கொண்டு சென்று அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பலகைகள் மேல் போட்டுள்ளார். பின்னர் உடலின் மீது விறகுகளை அடுக்கி வைத்து, பெட்ரோல் ஊற்றி தீ பற்றவைத்தார். உடல் எரியும் வரை அங்கேயே இருந்த பிரகாஷ், சாம்பலை அள்ளி கொண்டு சென்று, தலைமறைவாகிவிட்டார். அவர் சென்ற பிறகு இந்த பயங்கர சம்பவம் குறித்து முத்துலட்சுமி அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு ஊரக போலீசார், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாயை கொலை செய்துவிட்டு தப்பியோடிய பிரகாஷை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story