வீட்டுக்குள் பூட்டி வைத்து பெண்ணை அடித்து சித்ரவதை செய்தவர் கைது


வீட்டுக்குள் பூட்டி வைத்து பெண்ணை அடித்து சித்ரவதை செய்தவர் கைது
x
தினத்தந்தி 24 Sept 2020 5:01 AM IST (Updated: 24 Sept 2020 5:01 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுக்குள் பூட்டி வைத்து பெண்ணை அடித்து சித்ரவதை செய்தவரை போலீசார்கைது செய்தனர். மேலும் காயம் அடைந்த பெண்ணை சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா தெரணி கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்வாணன். இவரது மனைவி அபிஷேகா (வயது 23) . இவர் அதே பகுதியை சேர்ந்த கேபிள் டி.வி. கட்டணம் வசூலிக்கும் நல்லுசாமி வீட்டிற்கு நேற்று முன்தினம் மதியம், கட்டணம் செலுத்த சென்றிருந்தாராம்.

அப்போது வீட்டிலிருந்த நல்லுசாமி, அவரது மனைவி நாகஜோதி ஆகியோர் அபிஷேகாவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி வீட்டிற்குள் அடைத்து வைத்து அடித்து சித்ரவதை செய்தனராம். மேலும் அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை கழற்றினார்களாம். மேலும் அவருக்கு சூடு வைத்து, இது குறித்த வெளியே யாரிடமும் தெரிவிக்க கூடாது என மிரட்டி மாலையில் வீட்டை விட்டு அனுப்பினார்களாம். இதையடுத்து அபிஷேகாவை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

பலத்த காயம் அடைந்த அவருக்கு வெளி நோயாளியாக முதலுதவி சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டது. உள்நோயாளியாக அனுமதிக்கப்படவில்லையாம். இதனால் அபிஷேகா வீட்டிற்கு செல்லாமல் மருத்துவமனை வளாகத்தில் படுத்து விட்டார். பின்னர் நேற்று மதியம் தான் மருத்துவமனையில் உள்நோயாளியாக அபிஷேகா அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த தம்பதியினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகஜோதியை கைது செய்தனர். மேலும் நல்லுசாமியை தேடி வருகின்றனர்.

Next Story