28 செ.மீ. கொட்டித்தீர்த்தது: வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடான மும்பை - இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது


28 செ.மீ. கொட்டித்தீர்த்தது: வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடான மும்பை - இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது
x
தினத்தந்தி 24 Sept 2020 5:02 AM IST (Updated: 24 Sept 2020 5:02 AM IST)
t-max-icont-min-icon

வரலாறு காணாத மழையால் மும்பை நகரம் வெள்ளக்காடானது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.

மும்பை,

இந்த பருவமழை காலத்தில் ஏற்கனவே சில தடவை மும்பை நகரம் மழை வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், மீண்டும் வரலாறு காணாத மழை பெய்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு மேற்கு புறநகரில் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் நகர் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இது நள்ளிரவில் பலத்த மழையாக மாறி விடிய-விடிய கொட்டித்தீர்த்தது.

காலையில் எழுந்த மக்கள் கண்விழித்து பார்த்தபோது தங்களது பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதே வேளையில் பல குடிசைப்பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கு வசித்த மக்கள் இரவு விடிய விடிய தூக்கத்தை தொலைத்து தவித்தனர்.

வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு பல குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து இருந்தது. அவசர வேலை காரணமாக வெளியே சென்றவர்கள் சாலையில் ஏரி போல தேங்கி இருந்த வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். வெள்ளத்தை கடந்து செல்ல முடியாமல் பலர் வாகனங்களை ஆங்காங்கே போட்டுவிட்டு செல்ல வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது.

பல இடங்களில் வாகனங்கள் மூழ்கி கிடந்தது பிரளயத்தின் சோக சுவடுகளாக அமைந்தது.

மீண்டும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததால், அவசர தேவை பணிகளை தவிர மற்ற அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்து மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் உத்தரவிட்டார். அதன்படி அரசு அலுவலகங்களும், ஏராளமான தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டன. ஐகோர்ட்டுக்கும் விடுமுறை விடப்பட்டது.

சாலையில் 29 இடங்களில் இடுப்பளவுக்கு மேல் வெள்ளம் தேங்கியதால், பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது பல பஸ்கள் மாற்று வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டு இயக்கப்பட்டன.

சயான்-குர்லா, சுன்னாப்பட்டி-குர்லா இடையே தண்டவாளம் வெள்ளத்தில் மூழ்கி கால்வாய் போல காட்சியளித்தது. இதனால் மத்திய ரெயில்வேயில் சி.எஸ்.எம்.டி.- தானே, சி.எஸ்.எம்.டி.- வாஷி இடையே அத்தியாவசிய பணியாளர்களுக்காக இயக்கப்பட்டு வரும் மின்சார ரெயில்கள் அதிகாலை 5 மணி முதல் ரத்து செய்யப்பட்டன. இதேபோல மேற்கு ரெயில்வேயில் சர்ச்கேட்-அந்தேரி வழித்தடத்திலும் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

போக்குவரத்து அடியோடு முடங்கியதால் அத்தியாவசிய ஊழியர்கள் தங்களது பணியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். குறிப்பாக கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் கூட ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

நெடுந்தூர ரெயில்கள் செல்லும் நேரம் மாற்றியமைக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். நகரம் வெள்ளத்தில் மிதந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிபோனது.

மீட்பு பணியை மாநகராட்சி முடுக்கி விட்டது. பேரிடர் மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டு பொதுமக்களை காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதேபோல பக்கத்து மாவட்டங்களான தானே, பால்கர் மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியதால் அங்குள்ள பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 28 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

மும்பையை பொறுத்தவரை 1974-ம் ஆண்டு முதல் பெய்த 4-வது பெருமழை இதுவாகும் என மும்பை வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் கோசலிகர் தெரிவித்தார். இதில் அதிகப்பட்சமாக 1981-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதி 30.18 செ.மீ. மழை பெய்து இருந்தது. இந்த ஆண்டில் அதே செப்டம்பர் 23-ந் தேதி பெருமழை பெய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

3 ஆண்டுகளாக பெருமழையால் பாதித்த செப்டம்பர் 23-ந் தேதி

மும்பையில் நேற்று முன்தினம் இரவில் வெளுத்து வாங்கிய மழை நேற்று காலையில் தாக்கம் குறைந்து அவ்வப்போது விட்டு விட்டு மாலை வரை பெய்தது. இந்த கனமழை காரணமாக அந்தேரி சப்வே, கிங்சர்க்கிள், தாதர் இந்துமாதா, கோரகாவ், மலாடு, தகிசர், காட்கோபர், முல்லுண்டு ஆகிய பகுதிகளில் அதிகளவில் வெள்ளம் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது. தானே, பால்கர் மாவட்டத்திலும் மழையால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

மும்பையில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சாந்தாகுருசில் 28 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. இதில் அதிகப்பட்சமாக ராம்மந்திர் பகுதியில் 30 செ.மீ. மழையளவு பதிவானது. மும்பையில் பல இடங்களில் 12 செ.மீ. மழை பதிவாகியது.

நவிமும்பை, நெருலில் 30 செ.மீ., சி.பி.டி. பேலாப்பூரில் 28 செ.மீ., சான்பாடாவில் 18 செ.மீ., வாஷியில் 18 செ.மீ., கன்சோலியில் 17 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

ஒரு ஆண்டில் செப்டம்பரில் பெய்ய வேண்டிய வழக்கமான மழையில் 83 சதவீத மழை 12 மணி நேரத்தில் பெய்து விட்டதாக சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே டுவிட்டரில் தெரிவித்தார்.

மேலும் மும்பை வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் கோசலிகர் கூறியதாவது:-

மும்பையில் கடந்த 1974-ம் ஆண்டு முதல் பெய்த மழையளவு விவரம் எங்களிடம் உள்ளது. அன்றைய நாளில் இருந்து பெய்த 4-வது பெருமழை இதுவாகும். கடந்த 1981-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதியும், 1993-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதியும் தலா 31 செ.மீ. மழை பெய்து இருந்தது. 2017-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதி 30 செ.மீ. மழை பெய்தது. தற்போது அதே செப்டம்பர் மாதம் 23-ந் தேதி 28 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேற்கண்ட 4 ஆண்டுகளில் பெய்த பெருமழையும் செப்டம்பர் மாதமே பெய்துள்ளது. மேலும் 1981, 1993 மற்றும் 2020 ஆகிய 3 ஆண்டுகளிலும் செப்டம்பர் 23-ந் தேதி தான் பெருமழை பெய்து மக்களை பெரும் பாதிப்புக்கு ஆளாக்கி இருக்கிறது.

Next Story