ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
சென்னிமலை,
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் இருந்து நொய்யல் ஆறு உற்பத்தியாகி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் வழியாக ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கு வருகிறது.
பின்னர் ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது.
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் அணையில் 5 அடி உயரத்துக்கு மட்டுமே தண்ணீர் தேங்கி இருந்தது. அப்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 388 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 249 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டது.
நேற்று முன்தினம் இரவில் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 783 கன அடியாக இருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 11 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 363 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டது. நேற்று மாலை 5 மணி அளவில் அணையின் நீர் மட்டம் 12 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 590 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 460 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. முன்னதாக நொய்யல் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story