தாளவாடி அருகே, லாரிகளை மறித்து கரும்பை பிடுங்கி தின்ற யானைகள் - டிரைவர்கள் அச்சம்
தாளவாடி அருகே லாரிகளை மறித்து கரும்பை பிடுங்கி தின்னும் யானைகளால் டிரைவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
தாளவாடி,
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், தலமலை உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஆசனூர், தலமலை, தாளவாடி, கேர்மாளம் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.
தற்போது நல்ல மழை பெய்து உள்ளதால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கிறது. மேலும் அடர்ந்த வனப்பகுதி வழியாக திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை முக்கிய சாலையாக இருப்பதால் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
கடந்த சில நாட்களாக திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை யானைகள் தங்களுடைய குட்டிகளுடன் அடிக்கடி கடந்து செல்கின்றன. அவ்வாறு கடந்து செல்லும் யானைகள் சாலையோரமாக உலா வருகின்றன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தமிழக- கர்நாடக எல்லையில் தாளவாடியை அடுத்த காரப்பள்ளம் அருகே சென்றபோது குட்டிகளுடன் சாலையோரமாக வந்த யானையானது திடீரென கரும்பு லாரியை வழிமறித்தது. யானையை கண்டதும் டிரைவர் அப்படியே லாரியை நிறுத்தினார். பின்னர் அந்த யானையானது லாரியில் இருந்த கரும்பை பிடுங்கி தின்ன தொடங்கியது. சிறிது நேரத்துக்கு பின்னர் லாரியை அங்கிருந்து அதன் டிரைவர் ஓட்டி சென்றார்.
இதேபோல் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதையில் சென்றபோது லாரி பழுதாகி நின்றது. அப்போது அங்கு வந்த 2 யானைகள் கரும்பு வாசனையால் ரோட்டில் வந்து நின்று கொண்டன. பின்னர் அந்த யானைகள் லாரியில் இருந்த கரும்புகளை பிடுங்கி தின்றன. இரவு நேரம் என்பதால் டிரைவர் லாரியை விட்டு இறங்காமல் அவருடைய இருக்கையிலேயே பயந்தபடி இருந்தார்.
பின்னர் சிறிது நேரத்தில் அந்த 2 யானைகளும் வனப்பகுதிக்குள் சென்றன. இதனால் டிரைவர் நிம்மதி பெருமூச்சு அடைந்தார். குறிப்பாக திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு ஏற்றி வரும் லாரிகளை யானைகள் அடிக்கடி மறித்து கரும்புகளை பிடுங்கி தின்பது தொடர்கதையாகி வருகிறது. யானைகளால் இதுவரை டிரைவர்களுக்கு எந்தவித தொந்தரவும் ஏற்படவில்லை. எனினும் காட்டு யானைகளால் தங்களுக்கு ஆபத்து ஏற்படுமோ? என்ற அச்சத்தில் லாரிகளை இயக்க வேண்டி உள்ளதாக டிரைவர்கள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story