கொலைக்கு பழிக்குப்பழி வாங்க சதி: புதுவையில் வெடிகுண்டுகளுடன் சுற்றிய ரவுடியின் கூட்டாளிகள் 3 பேர் கைது - சிறையில் அடைக்கப்பட்டனர்


கொலைக்கு பழிக்குப்பழி வாங்க சதி: புதுவையில் வெடிகுண்டுகளுடன் சுற்றிய ரவுடியின் கூட்டாளிகள் 3 பேர் கைது - சிறையில் அடைக்கப்பட்டனர்
x
தினத்தந்தி 23 Sep 2020 11:50 PM GMT (Updated: 23 Sep 2020 11:50 PM GMT)

கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் சதி திட்டத்துடன் வெடிகுண்டுகள், கத்திகளுடன் சுற்றிய ரவுடியின் கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் நடந்த கொலை சம்பவங்களுக்கு பழிவாங்கும் படலம் சமீபகாலமாக தொடர்ந்து வருகிறது. அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு ரவுடி சோழனின் நண்பரான வினோத் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதற்கு காட்டாமணிக்குப்பம் பகுதியை சேர்ந்த ரவுடி அன்பு ரஜினி உதவியது சோழனுக்கு தெரியவந்தது. அதையடுத்து சில வாரங்களில் அன்பு ரஜினியை, வெடிகுண்டு வீசி கொலை செய்து பழிதீர்த்தனர். தற்போது சோழன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அன்பு ரஜினி கொலைக்கு பழிக்குப்பழி வாங்க அவரது ஆதரவாளர்கள் சோழன் மற்றும் அவரது கூட்டாளிகளை கொலை செய்ய திட்டமிட்டு வருகிறார்கள். இதுபற்றி அறிந்து உஷாரான சோழனின் கூட்டாளிகள் முந்திக் கொண்டு சம்பவங்களில் ஈடுபட சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து சதி திட்டம் தீட்டி வருகிறார்கள்.

இந்தநிலையில் குற்றச்சம்பவங்களை தடுக்க இரவு ரோந்து பணிகளை தீவிரப்படுத்துமாறு போலீசாருக்கு சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா உத்தரவிட்டார். அதன்படி கிழக்குப் பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் அறிவுரையின்பேரில் முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் கந்தன், இலக்கியவேந்தன் ஆகியோர் வைத்திக்குப்பம் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்ததையடுத்து அவர்களை மடக்கிப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து சந்தேகம் வலுத்ததை தொடர்ந்து அவர்களை சோதனையிட்டபோது ஒரு பையில் 2 கத்திகள், 4 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு பிடித்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கத்திகள், நாட்டு வெடிகுண்டுகள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதன்பின் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்ததில் அவர்கள் அன்பு ரஜினியின் ஆதரவாளர்களும், ரவுடிகளுமான வைத்திக்குப்பம் வெங்கடாச்சலம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த அருண்குமார் (வயது 20), ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகர் அருள் என்ற பழனி (22), குருசுக்குப்பம் மரவாடி வீதியை சேர்ந்த புஷ்பராஜ் (21) என்பது தெரியவந்தது.

இவர்களில் அருண்குமார் மீது குயிலாப்பாளையம் வாலிபர் கொலை வழக்கும், புஷ்பராஜ் மீது குருசுக்குப்பம் மாறன் கொலை வழக்கும், அருள் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

எனவே அடுத்த கொலை சதிக்காக அவர்கள் 3 பேரும் கத்திகள், வெடிகுண்டுகளுடன் இரவில் சுற்றி வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அருளுக்கும் ரவுடி குட்டி சிவா என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது. அப்போது குட்டி சிவா, அருளை தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் குட்டி சிவாவையும், பிரபல ரவுடியான சோழனின் கூட்டாளிகளை கொலை செய்யவும் சதி திட்டம் தீட்டியது அம்பலமானது.

இதற்காக காலாப்பட்டு அருகே உள்ள புத்துப்பட்டை சேர்ந்த ஜனா என்பவரின் தூண்டுதலின் பேரில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த தாக கைதான 3 பேரும் போலீசில் வாக்குமூலம் அளித்தனர். கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அவர்களுக்கு தொற்று இல்லை என முடிவு வந்தது. அதைத்தொடர்ந்து அருண்குமார், அருள், புஷ்பராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story