ஈரோடு-கோவை பயணிகள் ரெயில் இயக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை


ஈரோடு-கோவை பயணிகள் ரெயில் இயக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 24 Sept 2020 5:41 AM IST (Updated: 24 Sept 2020 5:41 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு-கோவை பயணிகள் ரெயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஈரோடு, 

ஈரோட்டில் இருந்து திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு ஏராளமானவர்கள் வேலை க்கு சென்று வருகிறார்கள். தினமும் வேலைக்கு செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் பயணிகள் ரெயிலை பயன்படுத்தி வருகிறார்கள். போக்குவரத்துக்கு சவுகரியமாகவும், கட்டணம் குறைவாகவும் இருப்பதால் ரெயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து முடங்கியது. அதன்பிறகு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தளர்வு செய்யப்பட்ட பிறகு வெளிமாவட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்கள், கார்களை பயன்படுத்தினார்கள். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி முதல் பஸ் போக்குவரத்து தொடங்கிய பிறகு வெளி மாவட்டங்களுக்கு பஸ்களில் சென்று வருகிறார்கள். ஆனால் பஸ்களில் செல்லும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க சிரமமாக இருப்பதால் பயணிகள் ரெயில் இயக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு சீசன் டிக்கெட் ரெயில் பயணிகள் சங்கத்தினர் கூறியதாவது:-

ஈரோட்டில் இருந்து திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு பல ஆயிரம் பேர் வேலைக்காக சென்று வருகிறார்கள். ரெயில் வசதி இல்லாததால் சொந்த வாகனத்திலும், பஸ்களிலும் வேலைக்காக சென்று வருகிறோம். பஸ்களில் செல்வதற்கு கூடுதல் நேரமாகிறது. மேலும், பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் முடியவில்லை. இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. பஸ் கட்டணமும் அதிகமாக இருப்பதால் பயணச்செலவும் அதிகமாகிறது.

ஏற்கனவே கொரோனா முடக்கம் காரணமாக வருமானமின்றி தவித்து வருகிறோம். கூடுதல் செலவு ஏற்படுவதால் சிரமம் அதிகமாகிறது. ஈரோட்டில் இருந்து கோவைக்கு காலை, மாலை நேரங்களில் பயணிகள் ரெயில்களை இயக்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஏற்கனவே எடுக்கப்பட்ட சலுகை கட்டண டிக்கெட் கொரோனா ஊரடங்கு காரணமாக பயன்படுத்தப்படாமலே காலாவதியாகிவிட்டது. எனவே ரெயில் சேவை தொடங்கும்போது டிக்கெட்டை காலநீட்டிப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி.யிடம் ரெயில் பயணிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Next Story