பள்ளிக்கூடங்கள் திறப்பு குறித்து தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் - கல்வியாளர்கள் வேண்டுகோள்
பள்ளிக்கூடங்கள் திறப்பு குறித்து தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஈரோடு,
நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள் கடந்த 21-ந் தேதி முதல் திறக்க மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது. அதன்படி ஆந்திரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை பள்ளிக்கூடங்கள் செயல்பட தொடங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள் திறப்பு குறித்த முறையான அறிவிப்பு இதுவரை வழங்கப்படாத நிலையில் கல்லூரிகள் வருகிற நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல் தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிக்கூடங்களில் ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுகாலாண்டு விடுமுறையாக இருப்பதாக ஒரு சாரார் கூறி வருகிறார்கள். காலாண்டு விடுமுறை என்றால் மதிப்பீட்டு முறை இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.
இதற்கிடையே வருகிற அக்டோபர் மாதம் 9-ந் தேதி தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்புவரை பள்ளிக்கூடங்களை இயக்குவது என்றும், 16-ந் தேதிக்கு பின்னர் அனைத்து வகுப்புகளும் இயங்க தொடங்கும் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன. இது பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே அந்த நிலை மீண்டும் வராமல் இருக்க பள்ளிக்கூடங்கள் திறப்பு குறித்து அரசு முறையான ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கல்வியாளர்கள் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.
இதுபற்றி கல்வியாளரும், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளருமான பி.பேட்ரிக் ரேய்மாண்ட் கூறியதாவது:-
மத்திய அரசு பள்ளிக்கூடங்கள் திறக்கலாம் என்று அனுமதி அளித்திருந்தாலும், தமிழகத்தில் மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு இதுவரை பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்த எந்த அறிவிப்பும் அளிக்கவில்லை.
தற்போது பாடங்கள் குறைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பாடங்களில் செய்முறை பகுதி மற்றும் வினா-விடை பகுதிகள் மட்டுமே குறைக்கப்பட்டு இருப்பதாக ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். வழக்கமான காலக்கட்டத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புரை அக்டோபர் -நவம்பர் மாதத்தில் முழு பாடத்திட்டத்தையும் முடித்து விட்டு அரையாண்டுக்கு பிறகு திருப்பி பார்த்தல் மற்றும் தேர்வுகளுக்கு சென்று விடுவார்கள். ஆனால், இனிமேல் வகுப்புகள் தொடங்கினால் எந்த அளவுக்கு பாடங்களை கற்றுக்கொடுக்க முடியும். பெயர் அளவுக்கு பாடம் எடுத்து தேர்வு வைத்தால் மாணவ-மாணவி களின் எதிர்காலம் என்னவாகும்? என்று பல கேள்விகள் உள்ளன.
எனவே இந்த கேள்விகளுக்கு தீர்வு காண, அனைத்து தரப்பினருடன் ஆலோசனை நடத்த வேண்டியது அவசியம்.
ஒரு வேளை அதிகபட்ச மக்களின் வேண்டுகோள் இந்த ஆண்டு வகுப்புகள் நடத்தாத ஜீரோ ஆண்டாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் அதையும் பரிசீலிக்கலாம். இல்லை என்றால் மே மாத வெயில் அளவு, சட்டப்பேரவை பொதுத்தேர்தலின் நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் இப்போதே கணக்கிட்டு சிறந்த திட்டமிடுதலை கையில் வைத்துக்கொண்டு பள்ளிக்கூடங்கள் திறப்பு குறித்து தெளிவான ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும். பள்ளிக்கூடம் திறப்பு இப்போது இல்லை என்பதை விட எப்போது திறக்கப்படும் என்பதை ஒரு மாதம் முன்கூட்டியே தெளிவாக அறிவித்தால் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் அதற்கு உரிய திட்டமிடுதலை தொடங்குவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story